டெல்லி : நாடாளுமன்ற குளிர் கால கூட்டத் தொடர் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இன்று (டிச. 13) வழக்கம் போல் நாடாளுமன்றம் கூடிய நிலையில், கடந்த 2001ஆம் ஆண்டு இந்திய நாடாளுமன்றத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தினம் அனுசரிக்கப்பட்டது.
தொடர்ந்து அவை இயங்கிக் கொண்டு இருந்த நிலையில், பார்வையாளர்கள் பகுதியில் இருந்து அவைக்குள் இரண்டு பேர் குதித்து களேபரத்தில் ஈடுபட்டனர். மேலும், எம்.பி.க்கள் இருக்கைகள் மீது தாவிக் குதித்தும் அங்கும் இங்கும் ஓடியும் உறுப்பினர்களுக்கு போக்கு காட்டினர். தொடர்ந்து கையில் இருந்து மர்ம கருவிகளை எம்.பிக்களை நோக்கி வீசினர்.
அதில் இருந்து வண்ண புகைகள் கிளம்பின. இதையடுத்து, சுற்றிவளைத்த எம்.பிக்கள் இரண்டு பேரையும் பிடித்து அவை பாதுகாவலர்களிடம் ஒப்படைத்தனர். அதேபோல், நாடாளுமன்றத்திற்கு வெளியே வண்ண புகைகளை வீசிய கூச்சலில் ஈடுபட்ட பெண் உள்பட இருவரையும் பாதுகாவலர்கள் பிடித்தனர்.
இந்த விவகாரம் நாடு முழுவதும் தீயாய் பரவிய நிலையில், பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் கண்டனம் தெரிவித்து உள்ளனர். நாடாளுமன்றத்தில் மக்களவையில் அத்துமீறி உள்ளே நுழைந்து களேபரத்தில் ஈடுபட்ட இருவரும் பாரதிய ஜனதா கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் மைசூரைச் சேர்ந்த பிரதாப் சிம்ஹாவின் நுழைவு ரசீதை பயன்படுத்தியதாக முதல் கட்ட தகவல் வெளியாகி கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியது.