ஆந்திரா: அனகாபல்லி மாவட்டம் ராம்லிலி மண்டலத்தில் உள்ள சீதாபாலம் கடற்கரைக்கு விடுமுறை நாட்களில் அப்பகுதியை பார்வையிட பல சுற்றுலா பயணிகள் வந்து செல்வது வழக்கம். விசாகப்பட்டினம் கடலோர பகுதியில் தண்டாடியில் உள்ள வடபாலம், புடிமாடகை, அச்யுதபுரத்தில் உள்ள சீதாபாலம், வடநரசபுரத்தில் உள்ள ராம்பில்லி, கொத்தப்பட்டினம், வடசீப்பெருப்பள்ளி, பரவாடாவில் உள்ள திக்கவாணிபாளையம், எஸ்.ராயவரத்தில் உள்ள ரேவுபோலவரம் என 11 கடற்கரைகள் உள்ளன. இப்பகுதிகளுக்கு வார இறுதி நாட்களிலும், கார்த்திகை மாதங்களிலும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 20) ஞாயிற்றுகிழமை 6 நண்பர்கள் சீதாபாலம் கடற்கரைக்கு சென்ற நிலையில், அவர்கள் பாறையின் மீது ஏறி புகைப்படம் எடுத்துள்ளனர். அப்போது அங்கு திடீரென அவர்கள் மீது எதிர்பாராத விதமாக அலை தாக்கியதில் 6 நண்பர்களும் கடலில் மூழ்கியுள்ளனர்.
இது குறித்து ரம்பிலி போலீசார் கூறியதாவது, "நீரில் மூழ்கிய 6 நபர்களும் விசாகப்பட்டினத்தை சேர்ந்த கட்டோஜு சாய் (19) மற்றும் கட்டோஜு காவ்யா (17), சாய் பிரியங்கா (27), சிம்மாச்சலத்தை சேர்ந்த கன்னவரபு ரவிசங்கர் (28), அல்லிபுராவை சேர்ந்த கண்டிபள்ளி பனீந்திரன் (25) ஆகிய 6 நண்பர்கள் நேற்று வார இறுதி நாளான ஞாயிற்றுகிழமையை கொண்டாடுவதற்கு சீதாபாலத்திற்கு வந்துள்ளனர்.
நண்பர்கள் புகைப்படம் எடுக்க முயன்ற போது அலை தாக்கி தண்ணீரில் விழுந்த நிலையில் அங்கிருந்த சுற்றுலா பயணிகள், மீனவர்கள் அவர்களை காப்பாற்ற சென்றனர். பின்னர், 6 நண்பர்களில் 5 நபர்களை மீனவர்கள் காப்பாற்றினர். இதில் சாய் பிரியங்கா கடலில் விழுந்த அதிர்ச்சியில் கோமா நிலைக்கு சென்றுள்ளார். மேலும், விசாகப்பட்டினம் ஒன் டவுனை சேர்ந்த கட்டோஜு சாய் நீரில் மூழ்கி இறந்துள்ளார்.