டெல்லி :அதானி குழும பங்குகளில் சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் விதமாக வர்த்தகம் செய்த ஆறு நிறுவனனங்கள் குறித்து விசாரித்து வருவதாக உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி தலைமையிலான வல்லுநர்கள் குழு தெரிவித்து உள்ளது. கண்டறியப்பட்ட 6 நிறுவனங்களில் நான்கு நிறுவனங்கள் வெளிநாட்டு முதலீட்டுகளை பெற்றுத் தரும் நிறுவனங்கள் என கண்டறியப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவின் நியூயார்க் நகரை தலைமையிடமாகக் கொண்டு, இயங்கி வரும் வர்த்தகம் மற்றும் தடயவியல் ஆய்வு நிறுவனமான ஹிண்டன்பர்க், கடந்த ஜனவரி மாதம் அதானி குழுமம் வரி ஏய்ப்பு, செயற்கை முறையில் பங்குகளின் மதிப்பை உயர்த்துவது உள்ளிட்ட பல்வேறு முறைகேடுகளை செய்ததாக அறிக்கை வெளியிட்டது.
இந்த அறிக்கை நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரத்தை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்தில் கடும் அமளியில் ஈடுபட்டனர். இந்த புகார் தொடர்பாக நாடாளுமன்ற கூட்டுக் குழு விசாரணை நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தன.
ஹிண்டன்பர்க் அறிக்கை தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடரப்பட்ட நிலையில், இந்த புகார் குறித்து விசாரிக்க உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.எம். சாப்ரே தலைமையில் 6 சிறப்பு வல்லுநர்கள் அடங்கிய குழு அமைக்கப்பட்டது. இதனிடையே ஹிண்டன்பர்க் ஆய்வு குறித்து விசாரிக்க 6 மாதங்கள் அவகாசம் கோரி உச்ச நீதிமன்றத்தில் செபி முறையிட்டது.