சிவகங்கையைச் சேர்ந்த சிலர் குடும்பத்துடன் புதுச்சேரி வில்லியனூர் அடுத்த கோர்க்காடு கீழ் சாத்தமங்கலம் பகுதியில் கரும்பு வெட்டும் தொழில் செய்துவந்தனர்.
அவர்கள் தங்களது குழந்தைகளையும் பணிக்கு அழைத்துவந்தனர். இந்த நிலையில் அந்தத் தொழிலாளர்களின் குழந்தைகளை கொத்தடிமைகளாக வைத்திருப்பதாக குழந்தை நலக் குழுவுக்கு புகார் வந்தது.
இதையடுத்து அந்தக் குழுவின் தலைவர் ராஜேந்திரன் தலைமையில், கடந்த அக்டோபர் 23ஆம் தேதி அங்கு சென்ற குழுவினர் ஆய்வு செய்தனர். அப்போது இரண்டு சிறுமிகளை அடைத்துவைத்தும், மூன்று சிறுமிகளை வாத்து மேய்க்க வைத்திருந்ததையும் கண்டனர்.
பின்னர், அந்தக் குழந்தைகளை குழுவினர் மீட்டு, காப்பகத்தில் தங்க வைத்தனர். இதுகுறித்து குழுவினர் காவல் மூத்த கண்காணிப்பாளரிடம் புகார் கொடுத்தனர். அவர் அதனை மங்கலம் காவல் துறைக்கு அனுப்பிவைத்தார். மங்கலம் காவல் துறையினர் விசாரணை நடத்திவருகின்றனர்.
அவர்கள் நடத்திய விசாரணையில், மீட்கப்பட்ட சிறுமிகளை ஒரு கும்பல் தொடர்ந்து கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துவந்தது தெரியவந்தது.
இதனையடுத்து வில்லியனூர் சுற்றுப் பகுதிகளைச் சார்ந்த கன்னியப்பன், ராஜ்குமார், பசுபதி, ஐயனார், சிவா, மூர்த்தி ஆகியோரைக் காவல் துறையினர் கைதுசெய்து கரோனா சோதனைக்கு அனுப்பியுள்ளனர்.