புதுடெல்லி: ஐஎன்எக்ஸ் மீடியா(INX Media) வழக்கில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரத்திற்கு சொந்தமான 3 அசையும் சொத்து, 1 அசையா சொத்து என ரூ.11.04 கோடி மதிப்பிலான 4 சொத்துகளை அமலாக்க இயக்குனரகம் செவ்வாய்க்கிழமை முடக்கப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது. முடக்கப்பட்ட இந்த நான்கு சொத்துக்களில் ஒன்று கர்நாடகாவின் கூர்க் மாவட்டத்தில் உள்ள அசையா சொத்து என்று அமலாக்கத்துறை தெரிவித்துள்ளது.
முன்னாள் மத்திய அமைச்சரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ப.சிதம்பரத்தின் மகனும், சிவகங்கை மக்களவைத் தொகுதியின் எம்.பி.யுமான கார்த்தி சிதம்பரம் ஏற்கனவே ஐஎன்எக்ஸ் வழக்கில் சிபிஐ மற்றும் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டவர். காங்கிரஸ் ஆட்சிக் காலத்தில் இவரது தந்தை மத்திய நிதியமைச்சராக இருந்த போது, ஐஎன்எக்எஸ் மீடியா நிறுவனம் அந்நிய முதலீட்டைப் பெறுவதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இதற்கு பிரதிபலனாக ஐஎன்எக்எஸ் மீடியா நிறுவனத்திடம் இருந்து லஞ்சம் பெற்றதாக சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தது. அதில் சட்ட விரோத பணப்பரிமாற்றம் நடைபெற்றுள்ளதாக அமலாக்கத்துறை இயக்குனரகமும் வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்குகளில் கார்த்தி சிதம்பரம் கைது செய்யப்பட்டு பின்னர் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.