டெல்லி: அருணாச்சலப் பிரதேசத்தின் தவாங் பகுதிக்கு அருகே உள்ள மெய்யான எல்லைக் கட்டுப்பாட்டுக் கோடு பகுதியில், கடந்த 9ஆம் தேதி சீன ராணுவ வீரர்கள், இந்திய எல்லைக்குள் ஊடுருவ முயன்றதாகத் தெரிகிறது. அவர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தியபோது, இருதரப்பினரிடையே மோதல் ஏற்பட்டுள்ளது. இதில் இரு தரப்பினருக்கும் லேசான காயம் ஏற்பட்டதாகத் தெரிகிறது.
இரண்டு நாட்களுக்குப் பிறகு கடந்த 11ஆம் தேதி, இருநாட்டு ராணுவ வீரர்களும் அப்பகுதியிலிருந்து விலகி தங்களது இடத்துக்கு சென்றுவிட்டதாக ராணுவ வட்டாரங்கள் தகவல் தெரிவித்தன. இந்தச் சம்பவம் காரணமாக எல்லையில் பதற்றம் நிலவி வந்தது. இதையடுத்து எல்லையில் அமைதியை நிலைநாட்டுவதற்காக ஏற்கெனவே உள்ள இருதரப்பு ஒப்பந்தத்தின்படி இரு நாட்டு கமாண்டர்களும் அணிவகுப்பை நடத்தினர்.