டெல்லி:இக்கூட்டத்தில் அமைச்சர்கள் குழுவின் அறிக்கையின் அடிப்படையில் கோவிட்-19 தொடர்பான தனிப்பட்ட பொருள்களுக்கு நிவாரணம் குறித்த முடிவு எடுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் 44ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் இன்று (ஜூன் 12) காலை 11 மணிக்கு நடைபெறுகிறது. இதில் நிதித் துறை இணை அமைச்சர் அனுராக் தாக்கூர், மாநில, யூனியன் பிரதேச நிதி அமைச்சர்கள், மூத்த அலுவலர்கள் பங்கேற்கின்றனர்.
மே 28ஆம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் மருத்துவ ஆக்சிஜன், ஆக்சிஜன் செறிவூட்டிகள், பிற ஆக்சிஜன் சேமிப்பு, போக்குவரத்து உபகரணங்கள், கோவிட்-19 தொடர்பான பொருள்களுக்கு ஒருங்கிணைந்த சரக்கு மற்றும் சேவை வரியிலிருந்து (Integrated Goods and Services Tax) முழு விலக்கு அளிக்க ஜிஎஸ்டி கவுன்சில் பரிந்துரைத்தது.
இந்த விலக்கு இந்தாண்டு ஆகஸ்ட் 31ஆம் தேதிவரை செல்லுபடியாகும். சிறு வரி செலுத்துவோர், நடுத்தர அளவிலான வரி செலுத்துவோரின் இணக்கச் சுமையைக் குறைக்கவும் ஜிஎஸ்டி கவுன்சில் முடிவுசெய்தது.
சிறிய வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்குவதற்காக தாமதமாக செலுத்த வேண்டிய கட்டணத்தை குறைக்க பொது மன்னிப்பு திட்டத்தை பரிந்துரைத்தது.