தங்கச்சி என்ற சொல்லைக் கேட்டாலே அண்ணனாக இருக்கும் ஒவ்வொருவருக்கும் மனதில் ஒரு இனம் புரியாத மகிழ்ச்சி தோன்றும். அதுவே அந்த உறவின் ஆழமாகும்.
பொதுவாக ஆண்கள் தனது தாயின் ஸ்தானத்தை அவ்வளவு எளிதில் யாருக்கும் தருவதில்லை, அதனை எளிதில் தட்டிச்செல்லும் ஒரே உறவு சகோதரிகள் தான். அதுவும் தங்கை என்ற உறவு குழந்தை என்ற ஸ்தானத்தையும் சேர்த்துப் பெற்றுக்கொள்கிறது.
தங்கைப் பாசம் என்றாலே அது ஒரு அலாதியான இன்பம் தான். சண்டை, தொல்லை, கேளிக்கை என அனைத்து விதமான செயல்களிலும் ஈடுபட்டு, பின்பு பாசத்தின் உச்சத்தில் அமரக்கூடியவள், இந்தத் தங்கை. எதையும் விட்டுக்கொடுக்காதவர்கள்கூட தனது தங்கைக்காக அனைத்தையும் இழக்கத் தயாராகிவிடுவார்கள். தனது தங்கைக்காக சொத்தை இழந்தவர்களும் இங்கு உண்டு.
ராவணன் என்ற பேரரசன்
ஆயிரம் உறவுகள் இருந்தாலும் தங்கை பாசத்திற்காக ஏங்குபவர்கள் இங்கு பலர் உண்டு, அதனைப் பூர்த்தி செய்பவர்கள் யாராக இருந்தாலும் அதனை அண்ணன் என்ற உறவு கட்டாயம் ஏற்றுக்கொள்ளும். அது தொப்புள் கொடி உறவாக இருக்க வேண்டிய அவசியம் இல்லை. இதிகாச புராணமான இராமாயணம் உருவானதும்கூட தங்கைப் பாசத்தால் நிகழ்ந்த சம்பவம்தான்.
தனது தங்கை சூர்ப்பனகையை இழிவுபடுத்திய காரணத்திற்காக, ராவணன் என்ற தமிழ்ப்பேரரசன் தனது சாம்ராஜ்ஜியத்தையே இழந்துவிடுவதாகப் புராணம் கூறுகிறது. அப்படிப்பட்ட உறவுதான் இந்த தங்கை என்ற உறவு.
எத்தனை மனக்கசப்புகள் ஏற்பட்டாலும் தங்கைக்கான இடத்தை அண்ணனும், அண்ணனுக்கான இடத்தை தங்கையும் யாருக்காகவும், எதற்காகவும் விட்டுக்கொடுப்பதில்லை.