டெல்லி: டெல்லி முதலமைச்சரும் ஆம் ஆத்மி கட்சியின் ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பு கௌரவ ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்தப் போராட்டத்தில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து கலந்துகொண்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சித்து, டெல்லியில் 22 ஆயிரம் கௌரவ ஆசிரியர்கள் உள்ளனர். இவர்கள் மாநில அரசால் கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர்” என்று குற்றஞ்சாட்டினார். மேலும், “உங்கள் மாநிலத்தில் உள்ள ஆசிரியர்களின் கோரிக்கைகளை முதலில் நிவர்த்தி செய்யுங்கள். அதன்பின்னர் பஞ்சாப் குறித்து பேசலாம்” என்றார்.
டெல்லி கௌரவ ஆசிரியர்கள் தர்ணா
முன்னதாக நவ.27ஆம் தேதி பஞ்சாப்பில் ஒப்பந்த அடிப்படையிலான ஆசிரியர்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடத்தினார்கள். இந்தப் போராட்டத்தில் பங்கெடுத்த அரவிந்த் கெஜ்ரிவால், “பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்திற்கு ஆம் ஆத்மி என்றும் துணை நிற்கும். பணி மாற்றத்தின்போது ஆசிரியர்களின் கோரிக்கைகள் ஏற்றுக்கொள்ளப்படும். ஆசிரியர்களுக்கு இலவசமாக மருத்துவ சிகிச்சைகள் அளிக்கப்படும்” என்றார்.
மேலும், பஞ்சாப் மாநிலத்தில் ஆம் ஆத்மி ஆட்சிக்கு வந்தால் பகுதிநேர ஆசிரியர்களின் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும்” என்றும் வாக்குறுதி அளித்தார். இந்த நிலையில் பஞ்சாப் காங்கிரஸ் தலைவர் நவ்ஜோத் சிங் சித்து, நேரடியாக டெல்லி சென்று அரவிந்த் கெஜ்ரிவால் வீடு முன்பே டெல்லி ஆசிரியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டம் நடத்தியுள்ளார்.
அமரீந்தர் சிங்- சித்து பனிப்போர்
பொதுவாக சித்து அனைத்து தரப்பு அரசியல்வாதிகளையும் சாடிவருகிறார். அவர் சொந்தக் கட்சித் தலைவர்களையும் விட்டுவைப்பதில்லை. குற்றம், குறைகள் எதுவும் இருப்பின் நேரடியாக சொல்லிவிடுகிறார். அண்மையில் இவருக்கும் பஞ்சாப் முன்னாள் முதலமைச்சர் கேப்டன் அமரீந்தர் சிங்குக்கும் இடையே பனிப்போர் நீடித்தது. தொடர்ந்து, கேப்டன் அமரீந்தர் சிங் முதலமைச்சர் பதவியை துறந்தார்.