போபால்:மத்தியப்பிரதேசத்தில் பழங்குடியின இளைஞர் மீது ஒருவர் சிறுநீர் கழிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வந்தது. அந்த வீடியோவில், ஒரு கடையின் படியில் அமர்ந்திருக்கும் பழங்குடியின இளைஞர் மீது வாயில் சிகரெட்டுடன் வந்த நபர், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழிப்பது பதிவாகி இருந்தது.
அந்த வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் அப்பாஸ் ஹபீஸ், பழங்குடியின மக்களின் நலன் குறித்து பொய்யாக பேசும் பாஜக தலைவர்கள், ஏழை பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழிப்பது போன்று நடந்து கொள்வதாகவும், இது கண்டிக்கத்தக்கது என்றும் பதிவிட்டு இருந்தார்.
மேலும் வீடியோவை மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானுக்கு டேக் செய்த அவர், ‘இதுதான் பழங்குடியின மக்கள் மீது நீங்கள் கொண்டு உள்ள நலனா? ஏன் அந்த பாஜக தவைவர் இன்னும் கைது செய்யப்படவில்லை?’ என்றும் பதிவிட்டிருந்தார். மேலும் பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் பர்வேஷ் சுக்லா என்றும், அவர் பாஜக எம்எல்ஏ கேதர்நாத் சுக்லாவின் பிரதிநிதி என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
மேலும், பழங்குடியின இளைஞர் மீது சிறுநீர் கழித்த நபர் பாஜக மூத்த தலைவர்களுடன் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் இருப்பதாக அப்பாஸ் ஹபீஸ் அந்த ட்விட்டர் பதிவில் தெரிவித்து இருந்தார். அது மட்டுமல்லாது, பாஜக மூத்த தலைவர்களுடன் பர்வேஷ் சுக்லா இருக்கும் புகைப்படங்களையும் காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டு இருந்தார்.