சிதி: மத்தியப் பிரதேச மாநிலத்தில், விரைவில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சிதி மாவட்டத்தில், பழங்குடியின இளைஞர் மீது, பாரதிய ஜனதா கட்சி பிரமுகர் சிறுநீர் கழித்த விவகாரம், அங்கு விஸ்வரூபம் எடுத்து உள்ளது. பாதிக்கப்பட்டவரின் வீட்டிற்கு, ஆளும் பாஜக தலைவர்களும், எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சியினரும் சென்று உள்ளதால், இந்த விவகாரத்தில் ஆட்டக்களம் சூடு பிடித்து உள்ளது. இந்த விவகாரத்தில், பாஜக மீது பல்வேறு தரப்பிலிருந்து குற்றச்சாட்டுகளை வீசி வரும் நிலையில், இந்த விவகாரத்தை, காங்கிரஸ் கட்சி, தனக்கு சாதகமாகப் பயன்படுத்த துவங்கி உள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக குற்றம்சாட்டப்பட்டவர் பிராமண சமூகத்தை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி நிர்வாகி ஆவார். கடந்த ஜூலை 4ஆம் தேதி, கோல் சமூகத்தைச் சேர்ந்த பழங்குடியினரான தஷ்மத் ராவத் என்ற நபர் மீது, சிறுநீர் கழித்த வீடியோ வெளியானது. இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பெரும் வைரலானதை அடுத்து இந்தச் சம்பவம் வெளிச்சத்திற்கு வந்தது. இந்திய தண்டனைச் சட்டம் 294 மற்றும் 504 மற்றும் பட்டியல் சாதிகள் மற்றும் பழங்குடியினர் (வன்கொடுமைகள் தடுப்பு) சட்டம் 1989-ன் தொடர்புடைய பிரிவுகளின் கீழ், பிரவேஷ் சுக்லாவை, போலீசார் கைது செய்தனர்.
குற்றம் சாட்டப்பட்ட பர்வேஷ் சுக்லாவின் தந்தையும், சிதி தொகுதி பாஜக எம்எல்ஏவுமான கேதார் நாத் சுக்லா, காங்கிரஸ் கட்சி, தன் மகனை குறிவைத்து பழிவாங்கி வருவதாக குறிப்பிட்டு உள்ளார். தன் மகனுக்கு எதிராகப் புகார் தெரிவிக்க, ராவத் நிர்பந்திக்கப்பட்டதாக, அவர் குறிப்பிட்டு இருந்த நிலையில், இந்த புகாருக்கான உறுதிமொழிப் பத்திரத்தில் கையெழுத்து இட தான் நிர்பந்திக்கப்பட்டதாக, போலீசிடம் ராவத் தெரிவித்து உள்ளார்.