போபால்:மத்திய பிரதேச சிதி மாவட்டத்தில் பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர் தஷ்மத் ராவத் மீது கடந்த சில தினங்களுக்கு முன் பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா என்பவர் சிறுநீர் கழித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.
அந்த வீடியோவில் பிரவேஷ் சுக்லா படிக்கட்டின் கீழே அமர்ந்திருந்த இளைஞர் மீது மனிதாபிமானம் அற்ற செயலை புரிந்ததை தொடர்ந்து பல்வேறு தரப்பினரும் பிரவேஷ் சுக்லா மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி வந்தனர்.
அந்த வீடியோ ஜூலை 4 செவ்வாய்க்கிழமை வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியதை தொடர்ந்து, பாஜக பிரமுகர் பிரவேஷ் சுக்லா ஜூலை 5ம் தேதி கைது செய்யப்பட்டார். அவர் மீது எஸ்சி - எஸ்டி வன்கொடுமை தடுப்புச் சட்டம், தேசிய பாதுகாப்புச் சட்டம் மற்றும் பொது இடத்தில் ஆபாசமாக நடந்து கொள்ளுதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயல்பட்டது தொடர்பான வழக்குகள் போடப்பட்டது.
அதைத் தொடர்ந்து ஜூலை 6ம் தேதி பாதிக்கப்பட்ட பழங்குடியின இளைஞரிடம் மத்தியப்பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் நிகழ்ந்த சம்பவத்திற்காக மன்னிப்பு கேட்டார். அதோடு, பாதிக்கப்பட்ட இளைஞரை நாற்காலியில் அமர வைத்து, அவரது பாதங்களைக் கழுவி பூஜை செய்து அந்த வீடியோவையும் வலைதளங்களில் பகிர்ந்தார். முதலமைச்சரின் இத்தகைய செயல் அரசியல் நகர்வுக்கான அடுத்த கட்டம் என அனைவரின் பொதுவான விமர்சனங்களையும் பெற்றது.