போபால்:சிறுநீர் கழித்த விவகாரத்தில் எதிர்க்கட்சிகளின் நடவடிக்கைகளை முறியடிக்கும் பொருட்டு, மத்தியப் பிரதேச முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், ஜுலை 4ஆம் தேதி நிகழ்ந்த அவமானகரமான செயலுக்கு ஆளான பழங்குடியினத் தொழிலாளியின் கால்களைக் கழுவினார். முதலமைச்சர் சவுகான், அந்த போட்டோக்களை, தனது ட்விட்டர் ஹேண்டிலில் பகிர்ந்து கொண்டு உள்ளார். இதுதொடர்பான, சிறிய வீடியோவும் ஊடகங்களுடன் பகிரப்பட்டு உள்ளது.
ஜூலை 6ஆம் தேதி, முதலமைச்சரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில், இந்த நிகழ்வு நடைபெற்று உள்ளது. அங்கு முதலமைச்சர் சவுகான், தனிப்பட்ட முறையில் பாதிக்கப்பட்டவரிடம் இந்த சம்பவத்திற்காக மன்னிப்புக் கேட்டார். அவரின் கால்களைக் கழுவி, மரியாதையுடன் அவரது நெற்றியில் கையை வைத்து, ஆழ்ந்த பணிவு மற்றும் உழைப்பாளியின் கண்ணியத்தை அங்கீகரிப்பதன் அடையாளமாக முதலமைச்சர் சவுகான், இதை செய்தார்.
''மனம் வருத்தமாக இருக்கிறது; தஷ்மத்ஜி, இது உங்கள் வலியைப் பகிர்ந்து கொள்வதற்கான முயற்சி. நானும் உங்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்!'' என்று முதலமைச்சர் சவுகான், பாதிக்கப்பட்டவரிடம் கூறினார்.
இதையும் படிங்க:கர்நாடகாவில் சுமார் ரூ.2.5 லட்சம் மதிப்பிலான தக்காளிகள் திருட்டு - டைமிங் அபேஸ்!
குற்றவாளி பிரவேஷ் சுக்லா புதன்கிழமை(ஜூலை 5) அதிகாலையில் கைது செய்யப்பட்டார். இந்த மனிதாபிமானமற்ற செயலின் வீடியோ வைரலாகப் பரவியதை தொடர்ந்து, பொதுமக்களின் சீற்றத்திற்கும், கண்டனத்திற்கும் வழிவகுத்தது. குற்றம் சாட்டப்பட்டவர் கடுமையான விளைவுகளைச் சந்திக்க நேரிடும் என்றும்; அவரது செயல்களுக்கு "கடுமையான தண்டனை" அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் தெரிவித்து உள்ளார்.
இதனை அடுத்து, சுக்லாவுக்கு எதிராக இந்திய தண்டனைச் சட்டத்தின் (IPC) பிரிவுகள் 294 (ஆபாசமான செயல்கள் தொடர்பானது) மற்றும் 504 (அமைதியை சீர்குலைக்கும் நோக்கத்துடன் அவமதிப்பு) ஆகிய பிரிவுகளின், எஸ்சி/எஸ்டியின் கீழ் உள்ள விதிகளுடன் எஃப்ஐஆர் (முதல் தகவல் அறிக்கை) பதிவு செய்யப்பட்டது. அதாவது பட்டியலிடப்பட்ட சாதிகள்/பட்டியலிடப்பட்ட பழங்குடியினர் பாதுகாப்புச் சட்டத்தின் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சுக்லா மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் (NSA) கீழ் குற்றம் சாட்டப்பட்டு உள்ளது.
முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகானின் இந்த செயலுக்கு ஆதரவாக பலர் கருத்துக்கள் பதிவிட்டு வந்தாலும், தேர்தலை மனதில் வைத்தே முதலமைச்சர் இவ்வாறு செய்வதாகவும் சிலர் விமர்சனங்களையும் பதிவு செய்து வருகின்றனர்.
இதையும் படிங்க: Tis Hazari: திஸ் ஹசாரி துப்பாக்கிச்சூடு சம்பவம் - வழக்கறிஞரின் உரிமம் ரத்து