கர்நாடகா:நடந்து முடிந்த கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றது. முதலமைச்சர் பதவி யாருக்கு என்ற இழுபறி முடிவுக்கு வந்த நிலையில், நாளை(மே.20) பதவியேற்பு விழா நடக்கவுள்ளது. கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக டி.கே.சிவக்குமாரும் பதவியேற்கவுள்ளனர். பெங்களூரில் உள்ள கந்தீரவா மைதானத்தில் பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.
பதவியேற்பு விழாவில் சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி மற்றும் முக்கிய காங்கிரஸ் தலைவர்கள் பலர் கலந்து கொள்கின்றனர். இவர்களைத் தவிர, பதவியேற்பு விழாவில் பங்கேற்க, எட்டு மாநில முதலமைச்சர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், சத்தீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல், இமாச்சலப் பிரதேச முதலமைச்சர் சுக்விந்தர்சிங், புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி, ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன் ஆகியோருக்கு காங்கிரஸ் கட்சி சார்பில் அழைப்பு விடுக்கக்கப்பட்டுள்ளது.
பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் முதலமைச்சர்கள் மற்றும் முக்கியத் தலைவர்களுக்கு Z+ மற்றும் Z பிரிவு பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. விழா நடைபெறும் மைதானத்தில், 12 காவல்துறை துணை ஆணையர்கள், 206 காவலர்கள், 11 ரிசர்வ் காவல்படை ஆய்வாளர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.