ஹைதராபாத்: கர்நாடகாவில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை வெற்றி பெற்றது. முதலமைச்சர் வேட்பாளர் யார் என்பதை அறிவிக்காமலே தேர்தலை எதிர்கொண்ட காங்கிரஸ் வெற்றி பெற்றதில் இருந்து, முதலமைச்சர் யார் என்பது பெரும் விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. காங்கிரசின் வெற்றிக்கும் பெரிதும் காரணமான சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என இருவரும் முதலமைச்சர் பதவிக்கு முனைப்பு காட்டுவதால் இந்த குழப்பம் ஏற்பட்டுள்ளது.
சனிக்கிழமை இரவு பாஜகவின் பசவராஜ் பொம்மை தனது பதவியை ராஜினாமா செய்ததை அடுத்து, கர்நாடகாவின் அடுத்த முதலமைச்சரை தீர்மானிக்க காங்கிரஸ் கட்சியும் இன்று ஆலோனை நடத்த உள்ளது. பழம்பெருமை வாய்ந்த காங்கிரஸ் கட்சியின் கர்நாடக முதலமைச்சர் பதவிக்கு டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா என செல்வாக்கு மிக்க இரண்டு பேர் போட்டியிடுவதால், பதவிக்கான நபரைத் தேர்ந்தெடுப்பதில் குழப்பம் நிலவுகிறது.
இந்நிலையில், டெல்லியில் நடைபெற உள்ள கூட்டத்தில் காங்கிரஸ் மேலிட உறுப்பினர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமாரை சந்திக்க உள்ளனர். பின்னர் இருவரும் காங்கிரஸ் தலைவர்கள் ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை தனித்தனியாக சந்தித்து பேசுவார்கள் என்று கூறப்படுகிறது.
சித்தராமையா, டி.கே.சிவக்குமார் என இருவரையும் சந்திக்கும் முன் முதலமைச்சர் பதவிக்கான நபர் குறித்து விவாதிக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி (AICC) தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை அவரது இல்லத்தில் வைத்து ராகுல் காந்தி சந்திக்கிறார். காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால், கட்சியின் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜ்வாலா உள்ளிட்டவர்கள் காங்கிரஸ் சட்டமன்றக் கட்சியைச் சேர்ந்த (CLP) சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை முன்வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் நேற்று (மே 14) பெங்களூருவில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் கூடி, அடுத்த முதலமைச்சரை தேர்ந்தெடுக்க கார்கேவுக்கு அதிகாரம் அளிக்க ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றியது. இந்தக் கூட்டத்தில் AICC பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால் மற்றும் மூன்று மத்திய பார்வையாளர்கள் கலந்து கொண்டனர். அவர்கள் சித்தராமையா மற்றும் கர்நாடகப் பிரதேச காங்கிரஸ் கமிட்டித் தலைவர் டி.கே. சிவக்குமார் ஆகியோருடன் ஆலோசனை நடத்தினர்.