மதுரா: உத்தரபிரதேச மாநிலம் மதுராவில் உள்ள ஷாகி இத்கா மசூதி அமைந்துள்ள இடம் ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமிக்கு சொந்தமானது என இந்து சேனா அமைப்பினர் கடந்த 8-ஆம் தேதி மதுரா மாவட்ட நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர்.
வழக்கு மாவட்ட சிவில் சீனியர் டிவிசன் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள் சம்பந்தப்பட்ட மசூதி அமைந்துள்ள இடத்தை அரசு அமீனா நேரில் சென்று அளவீடு செய்து ஜனவரி 20ஆம் தேதிக்குள் நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனர்.
இதுகுறித்து இந்து சேனா அமைப்பின் வழக்கறிஞர் கூறுகையில், மதுராவில் உள்ள ஷாகி இத்கா மசூதி அமைந்துள்ள இடம் ஸ்ரீ கிருஷ்ண ஜென்ம பூமிக்கு சொந்தமானது. 1669 காலக்கட்டங்களில் கிருஷ்ண ஜென்ம பூமியில் அமைந்திருந்த கோவிலை முகலாய பேரரசர் அவரங்கசீப் இடித்து அகற்றிவிட்டு மசூதி அமைத்துள்ளார்.