டெல்லி: டெல்லியில் காதலியை கொடூரமாக கொலை செய்து, 35 துண்டுகளாக கூறுபோட்ட காதலன் அஃப்தாப் அமீனை கடந்த 12ஆம் தேதி டெல்லி போலீசார் கைது செய்தனர். ஆறு மாதங்களுக்குப் பிறகு வெளிச்சத்திற்கு வந்த இந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக அஃப்தாபை போலீஸ் காவலில் எடுத்து டெல்லி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். விசாரணையில் பல்வேறு அதிர்ச்சித் தகவல்கள் தெரியவந்தன. உடல் பாகங்களை வெவ்வேறு இடங்களில் வீசியதோடு, தலையை எரித்து அடையாளத்தை அழித்ததாகவும் தெரிகிறது.
இந்த நிலையில், போலீசார் இன்று(நவ.17) அஃப்தாபை டெல்லி சாக்கெட் நீதிமன்றத்தில் காணொலி வாயிலாக ஆஜர்படுத்தினர். அஃப்தாபிடம் மேலும் விசாரணை நடத்தப்பட வேண்டி உள்ளதால், அவரது காவலை நீட்டிக்க வேண்டும் என போலீசார் கோரிக்கை வைத்தனர்.
அஃப்தாப்பை உத்தரகாண்ட், ஹிமாச்சலப்பிரதேசத்திற்கும் அழைத்துச்சென்று விசாரணை நடத்தவுள்ளதாகவும் தெரிவித்தனர். இதையடுத்து அஃப்தாபின் போலீஸ் காவலை மேலும் ஐந்து நாட்களுக்கு நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. அஃப்தாப் கூறும் தகவல்களின் முரண்பாடுகள் இருப்பதால், உண்மையை கண்டறிவதற்காக அவருக்கு நார்கோ சோதனை செய்யவும் காவல்துறை அனுமதி கோரியிருந்தது. அதன்படி நார்கோ சோதனைக்கும் (உண்மை கண்டறியும் சோதனை) நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
இதையும் படிங்க: 'அஃப்தாபின் போலீஸ் காவலை நீட்டிக்க வேண்டும்' - காரணங்களை உடைக்கும் காவல்துறை!