இந்தியாவில் கரோனா மூன்றாம் அலை பாதிப்பு குறித்து தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் முக்கிய எச்சரிக்கையை விடுத்துள்ளது.
அதில், வரும் அக்டோபர் மாதம் கோவிட்-19 மூன்றாம் அலை உச்சம் பெறும் எனவும் இது பெரியவர்களுடன் சேர்த்து சிறார்களையும் அதிகளவில் பாதிக்கும் எனக் கூறியுள்ளது.
எனவே, இணை நோய் மற்றும் மாற்று திறனாளி குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என நிபுணர் குழு தனது அறிக்கையில் பரிந்துரை செய்துள்ளது.
சிறார்களுக்கு அதிக பாதிப்பு ஏற்படும்பட்சத்தில் குழந்தைகளுக்கு சிறந்த சிகிச்சை அளிக்கும் வகையில் நிபுணர்கள், மருத்துவ கட்டமைப்பு இந்தியாவில் குறைவாகவே உள்ளது எனவும் ஆய்வுக் கட்டுரையில் தெரிவித்துள்ளது.
மூன்றாம் அலையும் பள்ளித் திறப்பும்
பஞ்சாப், சத்தீஸ்கர், மத்தியப் பிரதேசம், தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்கல் பள்ளிகளைத் திறக்கும் ஆயத்தப் பணிகளில் முழு வீச்சில் ஈடுபட்டுவருகின்றன.
மூன்றாம் அலை உச்சம் பெறும் என்ற அபாயம் உள்ள சூழலில் பள்ளிகளை திறப்பது சரியான முடிவுதானா என பல தரப்பிலும் சந்தேகம் எழ தொடங்கியுள்ளது.
அனைத்து ஆசிரியர்களும், கல்வித்துறை பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியுள்ளார்களா என்பதை அரசு உறுதி செய்ய வேண்டும் என மருத்துவக் குழு தெரிவித்துள்ளது.
சிறார்களுக்குத் தடுப்பூசி
இந்தியாவில் 12-18 வயது குழந்தைகளுக்கு கோவிட் தடுப்பூசி செலுத்தும் பணிகள் விரைவில் தொடங்கும் என அரசு கடந்த ஜூலை மாதத்தில் தெரிவித்திருந்தது. சைடஸ் காடில்லா நிறுவனம் 12-18 வயதினருக்கான தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபடுகிறது.
அதேபோல், பாரத் பயோட்டெக் நிறுவனம், 2-18 வயதினருக்கான தடுப்பூசி பரிசோதனையில் ஈடுபட்டுவருகிறது.
உலகளவில் பைசர் நிறுவனத்தின் கோவிட் தடுப்பூசி மட்டும் சிறார்களுக்குச் செலுத்தப்பட்டுவருகிறது. இந்தத் தடுப்பூசியை இந்தியாவில் உடனடி பயன்பாட்டிற்கும் கொண்டுவரும் முயற்சிகளும் நடைபெற்றுவருகின்றது.
இதையும் படிங்க:தேசியக்கொடி மீது பாஜக கொடி... இது சரியா? - கேள்வி எழுப்பும் காங்கிரஸ்