போபால் (மத்திய பிரதேசம்): மத்திய பிரதேசத்தின் உஜ்ஜய்ன் தெற்கு தொகுதி எம்.எல்.ஏ-வான மோகன் யாதவ் மத்திய பிரதேச பாஜக சட்டமன்ற குழுத் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். சமீபத்தில் நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்ற போதும், புதிய முதலமைச்சரைத் தேர்வு செய்ய பாஜக ஒரு வாரம் எடுத்துக் கொண்டது.
இந்த தேர்தலில் தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட காங்கிரஸ் வேட்பாளரை மோகன் யாதவ் 12 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தற்போது மத்திய பிரதேச மாநில முதலமைச்சராக மோகன் யாதவ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2013 ஆண்டு முதன்முறை எம்எல்ஏவான மோகன் யாதவ், சிவராஜ்சிங் சவுகான் அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக பணியாற்றினார்.
கடந்த 2005ம் ஆண்டு முதல் 4 முறை முதலமைச்சராக இருந்த சிவராஜ்சிங் சவுகான், இம்முறையும் முதலமைச்சராக தேர்வு செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கப்பட்டது. இன்று புதிய முதலமைச்சர் குறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இன்று காலையில் எக்ஸ் சமூகவலைத்தள பக்கத்தில் ராம் ராம் என மட்டும் பதிவிட்டிருந்தார்.
இதனிடையே புதிராக தேர்வான முதலமைச்சரான மோகன் யாதவை , மாலை அணிவித்து கவுரவித்த சிவராஜ் சிங் சவுகான், வாழ்த்துகளை பரிமாறிக் கொண்டார். மத்திய பிரதேசத்தில் துணை முதலமைச்சர்களாக இருவரது பெயர் அறிவிக்கப்பட்டுள்ளது ஜெகதீஷ் தியோரா மற்றும் ராஜேஷ் சுக்லா ஆகியோர் துணை முதலமைச்சர்களாக தேர்வாகியுள்ளனர். சட்டமன்ற சபாநாயகராக முன்னாள் மத்திய வேளாண் அமைச்சர் நரேந்திரசிங் தோமர் தேர்வாகியுள்ளார்.