டெல்லி : கர்நாடக காங்கிரசில் திடீர் விரிசல் ஏற்பட்டதன் காரணமாக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் டெல்லி பயணம் மேற்கொண்டதாக தகவல் பரவிய நிலையில் அது குறித்து அவர் விளக்கம் அளித்து உள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப் பேரவைக்கு கடந்த மே. 10ஆம் தேதி ஒரே கட்டமாக சட்டமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில் மே. 13ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இதில் காங்கிரஸ் கட்சி 135 இடங்களை கைப்பற்றி அறுதி பெறும்பான்மையுடன் ஆட்சியைக் கைப்பற்றியது.
கர்நாடக முதலமைச்சராக சித்தராமையாவும், துணை முதலமைச்சராக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாரும் தேர்வு செய்யப்பட்டனர். முதலமைச்சர் ரேசில் இருவருக்கும் இடையே கடும் போட்டி நிலவிய நிலையில், டி.கே. சிவகுமாரை சரிகட்டிய காங்கிரஸ் மேலிடம் சித்தராமையாவை முதலமைச்சராக தேர்வு செய்தது.
கடந்த 20ஆம் தேதி பெங்களூரு கண்டீவரா மைதானத்தில் நடைபெற்ற விழாவில் இருவரும் பதவியேற்றுக் கொண்டனர். தொடர்ந்து 8 அமைச்சர்களும் பதவியேற்றுக் கொண்டனர். இந்நிலையில் முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்களை பதவியேற்பை தொடர்ந்து 3 நாட்கள் சட்டசபை கூட்டப்பட்டு எம்.எல்.ஏ.க்கள் பதவியேற்றுக் கொண்டனர்.
தொடர்ந்து காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் அமைச்சருமான யு.டி. காதர் சபாநாயகராக தேர்வு செய்யப்பட்டார். இந்நிலையில், கர்நாடக துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார் திடீரென டெல்லி பயணம் மேற்கொண்டு உள்ளார். பதவியேற்பு முடிந்த சிறிது நாட்களிலேயே டி.கே. சிவகுமார் டெல்லி பயணம் மேற்கொண்டது, மாநில அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியது.
கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவுக்கு, டி.கே. சிவகுமாருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதாகவும் அதுகுறித்து முறையிட டி.கே. சிவகுமார் டெல்லி சென்றதாகவும் பல்வேறு கருத்துகள் உலாவின. இந்நிலையில், கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் குறித்து ஆலோசனை நடத்தவே டெல்லி சென்றதாக கூறி வதந்திகளுக்கு டி.கே. சிவகுமார் முற்றுப்புள்ளி வைத்து உள்ளார்.
செய்தியாளர்களை சந்தித்த டி.கே. சிவகுமார், டெல்லி பயணம் சாதாரணம் தான் என்றும், அமைச்சரவை விரிவாக்கத்தை விரைவாக முடிப்பது தொடர்பாக காங்கிரஸ் மேலிட தலைவர்களிடம் ஆலோசனை நடத்த டெல்லி வந்ததாக கூறினார். அமைச்சரவை விரிவாக்கம் குறித்து காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவை சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளதாக டி.கே. சிவகுமார் தெரிவித்தார்.
மேலும், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையாவும் இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொள்ள உள்ளதாகவும், விரைவில் அவரும் டெல்லி வருவார் என்றும் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமார் கூறினார். கட்சிக்குள் எந்தவித விரிசல் கிடையாது என்றும், தனக்கும் முதலமைச்சருக்கும் கருத்து வேறுபாடு இல்லை என்றும் டி.கே சிவகுமார் தெரிவித்தார்.
முதலமைச்சர் சித்தராமையா வீடு முன் காங்கிரஸ் எம்.எல்.ஏ. டி. சுதாகரின் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தியது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அது மிகவும் இயல்பான விஷயம் என்றும் அனைத்துத் தொண்டர்களும் அமைச்சர்களாக விரும்புவதாகவும் அவர் தெரிவித்தார். கர்நாடகாவில் அமைச்சரவையில் 34 உறுப்பினர்கள் அங்கம் வகிக்க ஏதுவான சூழல் நிலவும் நிலையில், எந்த தரப்பை சேர்ந்தவர்களை அமைச்சராக தேர்வு செய்வது என கட்சி மேலிடம் விழிபிதுங்கி இருப்பதாக கூறப்படுகிறது.
இதையும் படிங்க :கர்நாடக சபாநாயகராக யு.டி. காதர் தேர்வு... இவர் தான் முதல் சபாநாயகர்!