நாக்பூர் : மத்திய பாஜக அரசாங்கம் உடனடியாக பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் எரிவாயு (கேஸ்) விலையை திரும்பபெற வேண்டும், இல்லாவிட்டால் சிவசேனா தொண்டர்கள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என ஆர்ப்பாட்டத்தில் சிவசேனா பிரமுகர் கூறினார்.
பெட்ரோல், டீசல் விலை உயர்வு: நாடு முழுக்க கடந்தாண்டு நவம்பர் வரை பெட்ரோல், டீசல் விலை மிகப்பெரிய அளவில் உயர்வைக் கண்டது. கிட்டத்தட்ட அனைத்து மாநிலங்களில் பெட்ரோல் லிட்டர் ரூ.100ஐ மிஞ்சியது.
இந்த நிலையில் உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், பஞ்சாப், மேகாலயா மற்றும் கோவா உள்ளிட்ட 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிப்பு வெளியானது. இந்தத் தேர்தல் அறிவிப்புக்கு முன்னதாகவே பெட்ரோல், டீசல் விலையில் பெரிதளவு மாற்றம் ஏற்படவில்லை.
சிவசேனா ஆர்ப்பாட்டம் : இந்நிலையில் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில் தற்போது மீண்டும் பெட்ரோல், டீசல் விலைகள் அதிகரிக்கத் தொடங்கியுள்ளன. இந்த விலை உயர்வை திரும்ப பெற வேண்டும் என்பதை வலியுறுத்தி சிவசேனா கட்சித் தொண்டர்கள் நாக்பூரில் உள்ள கோலிபர் சவுக்கில் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அப்போது பாஜக அரசாங்கம் பெட்ரோல், டீசல் மற்றும் கேஸ் விலையை திரும்பபெறாவிட்டால், ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்தனர். கடந்த செவ்வாய்க்கிழமை (மார்ச் 22) பெட்ரோல் மற்றும் டீசல் விலை 80 காசுகள் உயர்த்தப்பட்டது. மேலும் சமையல் எரிவாயு விலையும் ரூ.50 அதிகரித்தது நினைவு கூரத்தக்கது.
இதையும் படிங்க : சாக்கடையில் அடைப்பு: ஒப்பந்ததாரரை சாக்கடை நீரில் உட்கார வைத்த சிவசேனா