கோவா: உத்தரப் பிரதேசம், பஞ்சாப், உத்தரகாண்ட், கோவா, மணிப்பூர் ஆகிய ஐந்து மாநிலங்களுக்கு பிப்ரவரி மாதம் முதல் சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த மாநிலங்களில் அரசியல் கட்சியினர் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் 40 சட்டப்பேரவைத் தொகுதிகளைக் கொண்ட கோவா மாநிலத்தில் பிப்ரவரி 14ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆளும் பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி, திருணமூல் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் களம் கண்டுள்ளன. அதன்படி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து இன்று (ஜனவரி 19) தேசியவாத காங்கிரஸ் கட்சித் தலைவர்கள் பிரபுல் படேல், ஜிதேந்திரா அவாத், சிவசேனா கட்சி மூத்தத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான சஞ்சய் ராவத் ஆகியோர் கூட்டாகச் செய்தியாளரைச் சந்தித்தனர். அப்போது, கோவா சட்டப்பேரவைத் தேர்தலில் சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி) கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதாக அறிவித்தனர்.