திருவனந்தபுரம்:கேரள மாநிலம் கோழிக்கோட்டில் கடந்த சில தினங்களாக ஷிகெல்லா என்னும் பாக்டீரியா தொற்று பரவிவருகிறது. கடந்த வாரம் அம்மாவட்டத்தைச் சேர்ந்த 11 வயது சிறுவன், இந்தத் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். கரோனா பரவலுக்கு மத்தியில் தற்போது மற்றொரு தொற்று பரவிவருவது மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக பேசிய அம்மாநில சுகாதாரத் துறை அமைச்சர் சைலஜா கூறுகையில், "ஷிகெல்லா தொற்று காரணமாக கடந்த வாரம் 11 வயது சிறுவன் உயிரிழந்தான். ஷிகெல்லா தொற்று இருப்பதாக சந்தேகிக்கப்படுகிற 50 பேருக்கு நடத்தப்பட்ட சோதனையில், ஆறு பேருக்கு தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது. தற்போது இரண்டு பேர் மட்டும் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்று வருகின்றனர். மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.