டாக்கா:வங்கதேசத்தில் நடந்து முடிந்த வாக்குப்பதிவு எண்ணிக்கையை நேற்று (ஜன.7) தேர்தல் ஆணையம் வெளியிட்டது. இந்த வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ஷேக் ஹசீனா(76) தலைமையிலான ஆளும் அவாமி லீக் கட்சி 50 சதவீதத்திற்கும் அதிகமான இடங்களை கைப்பற்றியது. 299 நாடாளுமன்ற தொகுதிகளைக் கொண்ட வங்கதேசத்தில், 12 வது நாடாளுமன்ற தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வங்கதேச தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இதனை கோபால்கஞ்ச் துணை ஆணையரும் தேர்தல் அதிகாரியுமான காசி மஹ்புபுல் ஆலம் வெளியிட்டார்.
அவாமி லீக் தலைவரும் வங்கதேசத்தின் பிரதமருமான ஷேக் ஹசீனா, அந்நாட்டில் நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் கோபால்கஞ்ச்-3 தொகுதியில் போட்டியிட்ட நிலையில், அமோக வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம் அவர் மீண்டும் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதே சமயம் இவரை எதிர்த்து போட்டியிட்ட வங்காளதேச சுப்ரீம் கட்சியைச் சேர்ந்த நிஜாம் உதின் லஷ்கர் வெறும் 469 வாக்குகளைப் பெற்று தோல்வியைத் தழுவினார். இதன்மூலம் அவாமி லீக் கட்சி அந்நாட்டில் மூன்றில் இரண்டு பங்கு வெற்றி வாய்ப்பைப் பெற்றதாக கூறப்படுகிறது.
அவர் 1986 ஆம் ஆண்டு முதல் 8வது முறையாக கோபால்கஞ்ச்-3 தொகுதியில் ஷேக் ஹசீனா வெற்றி பெற்றுள்ளார். இதுதவிர, ஆளும் அவாமி லீக் வேட்பாளர்கள் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகிக்கின்றனர். இதனிடையே, அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான தேசியவாத கட்சி (பிஎன்பி) தேர்தலை புறக்கணித்தனர். இந்த நிலையில், ஷேக் ஹசீனா ஐந்தாவது முறையாக பிரதமர் பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.