லண்டன்: 76-வது பிரிட்டீஷ் அகாடமி பிலிம் அவார்ட்ஸ் விருது விழா இங்கிலாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. ஹாலிவுட் அகாடமி விருதுக்கு இணையாக பிரிட்டீஷ் அகாடமி பிலிம் அவார்ட்ஸ் கருதப்படுவதால், இந்த விருதினை பெற கலைஞர்களிடையே கடும் போட்டி நிலவுகிறது. மேலும் இந்த விருது, மார்ச் மாதம் நடைபெறும் ஆஸ்கர் விருது விழாவில் பிரதிபலிக்கும் என்பதால் சினிமா ஆர்வலர்களால் பாப்டா விருது பிரிட்டீஷ் ஆஸ்கர் என்றும் அழைக்கப்படுகிறது.
இந்நிலையில் 76வது பிரிட்டீஷ் அகாடமி பிலிம் அவார்ட்ஸ் லண்டனில் நடைபெற்றது. சிறந்த திரைப்படமாக All Quiet on the Western Front தேர்வு செய்யப்பட்டது. 1914ஆம் ஆண்டு நடைபெற்ற முதலாம் உலக போரை கதைக் களமாக கொண்ட இந்த திரைப்படத்திற்கு சிறந்த திரைப்படம் உள்பட 7 விருதுகள் வழங்கப்பட்டன.
இனவெறிக்கு எதிராக பாடல்கள் மூலம் பிரசாரம் செய்த அமெரிக்க பாடகர் எல்விஸ் பிரெஸ்லி (Elvis Presley) வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்த அமெரிக்க நடிகர் ஆஸ்டின் பட்லர்(Austin Butler) சிறந்த நடிகருக்கான விருதை பெற்றார். சிறந்த நடிகைக்கான விருதை ஆஸ்திரேலிய நடிகை கேத்ரீன் எலிஸ் பிளான்செட் பெற்றார்.