முன்னாள் மக்களவை சபாநாயகர் சுமித்ரா மகாஜன் காலமானார் என காங்கிரஸ் எம்.பி சசிதரூர் தனது ட்விட்டரில் பதிவிட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால், இதில் உண்மை இல்லை என பா.ஜ.க. மூத்த தலைவர் கைலாஷ் விஜய்வர்க்கியா ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.
அதில், மக்களவையின் முன்னாள் சபாநாயகரும், பா.ஜ.கவின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுமித்ரா மகாஜன் நலமுடன் உள்ளார். அவரை பற்றிய மரணச் செய்திகள் வெறும் வதந்தியே எனக் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து, சசிதரூர் தனது ட்வீட்டை டெலிட் செய்துவிட்டு புதிய ட்வீட்டை பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவில், "நன்றி கைலாஷ், நான் ட்வீட்டை டெலிட் செய்துவிட்டேன். பொய்யான செய்திகளைப் பரப்ப மக்கள் ஏன் ஆர்வம் காட்டுகிறார்கள் என தெரியவில்லை. சுமித்ரா ஜியின் உடல்நலம் மற்றும் நீண்ட ஆயுளுக்கு எனது பிரார்த்தனை எனக் குறிப்பிட்டிருந்தார்.