மும்பை :தான் சோர்வாக இல்லை என்றும் அரசியலில் இருந்து ஓய்வு பெறும் திட்டமும் இல்லை என்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவார் தெரிவித்து உள்ளார்.
கடந்த இரண்டு வாரங்களாக மராட்டிய அரசியலில் பெரும் புயல் கிளம்பி உள்ளது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த அஜித் பவார் தனது ஆதரவு எம்.எல்.ஏக்கள் 30க்கும் மேற்பட்டோருடன், மாநிலத்தை ஆளும் பாஜக - சிவசேனா கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்தார். மராட்டிய துணை முதலமைச்சராக அஜித் பவார் பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில், அவரது தலைமையிலான 8 எம்.எல்.ஏக்கள் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டேவின் அமைச்சரவையில் பதவியேற்றுக் கொண்டனர்.
மேலும், கட்சியில் ஏறத்தாழ 40க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களின் ஆதரவு தங்கள் பக்கம் இருப்பதாகவும், தங்கள் தரப்பே உண்மையான தேசியவாத காங்கிரஸ் என தெரிவித்து உள்ள அஜித் பவார், கட்சியின் பெயர், சின்னத்தை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக் கோரி இந்திய தேர்தல் ஆணையத்திடம் மனுத் தாக்கல் செய்தார்.
இதனிடையே, மும்பையில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் சரத் பவார் அணி மற்றும் அஜித் பவார் அணியின் ஆலோசனைக் கூட்டம் தனித் தனியாக நடைபெற்ற நிலையில் மக்கள் நலனுக்கான திட்டங்களை செயல்படுத்த மகாராஷ்டிர மாநிலத்தின் முதலமைச்சராக விரும்புவதாகவும், அதற்கு அவரது அரசியல் குருவான சரத் பவாரின் ஆசி வேண்டும் என்றும் தெரிவித்தார்.
எல்லோர் முன்னிலையில் தன்னை வில்லனாக சரத் பவார் சித்தரித்தார் என்றும் இருப்பினும் அவர் மீது தனக்கு ஆழ்ந்த மரியாதை உண்டு என்றார். ஐஏஎஸ் அதிகாரிகள் 60 வயதில் ஓய்வு பெறுகிறார்கள் என்றும் ஏன் அரசியலில் பாஜக தலைவர்கள் 75 வயதில் ஓய்வு பெறுவதாக தெரிவித்த அவர் 83 வயதாகும் சரத் பவார் எப்போது நிறுத்தப் போகிறார் என்றார்.