புது டெல்லி:லோக்சபா தேர்தலை முன்னிட்டு, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார், கட்சியின் ஆண்டுவிழாவில் எம்.பி சுப்ரியா சுலே மற்றும் பிரபுல் படேலுக்கு செயல் தலைவர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளார். மேலும் பேசிய அவர், சிறுபான்மையினரிடம் பாஜக பயங்கரவாதத்தை உருவாக்குகிறது. பாஜக ஆட்சியை தவறாக பயன்படுத்துகிறது. ஆளும் கட்சி மதவெறியை பரப்புகிறது என்று விமர்சித்தார்.
தேசியவாத காங்கிரஸ் கட்சி உருவாக்கப்பட்டு 24 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில், கட்சியின் 25வது ஆண்டு விழா இன்று டெல்லியில் கொண்டாடப்பட்டது. தேசியவாத காங்கிரஸ் கட்சி (NCP) 10 ஜூன் 1999 அன்று உருவாக்கப்பட்டதில் இருந்து மத்திய மற்றும் மாநில அரசியலில் முக்கிய பங்கு வகித்து வருகிறது.
சரத் பவார் தேசியவாத காங்கிரஸ் கட்சியைத் தோற்றுவித்த குறுகிய காலத்திலேயே இந்திய தேர்தல் ஆணையம் தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு தேசிய கட்சி அந்தஸ்தை வழங்கியது. இதன் மூலம் மிகக் குறுகிய காலத்தில் தேசியக் கட்சி என்ற அந்தஸ்தை அடைந்த முதல் கட்சி என்ற பெருமையை தேசியவாத காங்கிரஸ் பெற்றது.
கட்சியின் ஆண்டுவிழா நிகழ்வின் போது, சுனில் தட்கரேவுக்கு தேசிய பொதுச் செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டது. மத்தியப் பிரதேசம், குஜராத், கோவா, ராஜஸ்தான் மற்றும் ஜார்கண்ட் ஆகிய மாநிலங்களின் பொறுப்புகள் படேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. மேலும் என்சிபியின் ராஜ்யசபா எம்பிக்களை ஒருங்கிணைக்கும் பொறுப்பும் படேலிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சுப்ரியா சுலே மகாராஷ்டிரா, பஞ்சாப், ஹரியானா ஆகிய மாநிலங்களின் தேதல் பொறுப்பாளராகவும், மக்களவை தேர்தலின் ஒருங்கிணைப்பாளராக இருப்பார் எனவும், இளைஞர் மற்றும் பெண்கள் பிரிவு பொறுப்பாளராக இருப்பார் எனவும் அறிவிக்கப்பட்டு உள்ளது.