டெல்லி: மத்திய அரசின் வல்லுநர் குழுவிலிருந்து (Indian SARS-CoV-2 Genome Sequencing Consortia- INSACOG) மூத்த வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் விலகியுள்ளார்.
நாட்டில் பரவிவரும் கரோனா தொற்றின் இரண்டாவது அலை குறித்து சில தினங்களுக்கு முன்பு மத்திய அரசின் வல்லுநர் குழுவில் இடம் பெற்றிருந்த மூத்த வைராலஜிஸ்ட் ஷாகித் ஜமீல் விவரித்திருந்தார்.
அதில், "இந்தியாவில் கரோனா தொற்று பாதிப்புக்கு ஒரு நாளில் 96 ஆயிரம் பேர் உள்ளானால் பரவாயில்லை. ஆனால், இங்கு சூழல் மிக மோசமானதாக இருக்கிறது. ஒரு நாளில் 4 லட்சத்திற்கும் மேல் பாதிப்புகளைக் கொண்டு இரண்டாவது அலை தொடங்குகிறது.
குறைந்திருந்த கரோனா தொற்றின் பரவல், இப்படி வேகமாகப் பரவ மக்கள் அச்சமின்றி ஒன்று கூடியதே காரணம். குறிப்பாகத் தேர்தல் பரப்புரைகள், மத ஒன்று கூடல்கள் போன்றவை தான் கரோனா நோய்த் தொற்றின் இரண்டாவது அலைக்கு பரவலக்கு காரணமாக அமைந்துள்ளது.
அதுமட்டுமில்லாமல், மக்களுக்குத் தடுப்பூசி செலுத்துவதில் ஏற்பட்ட தொய்வு மிக முக்கியமான காரணமாகப் பார்க்கப்படுகிறது" என்று தெரிவித்திருந்தார். இச்சூழலில், மத்திய அரசின் வல்லுநர் குழுவிலிருந்து அவர் விலகியுள்ளார்.
இருப்பினும், அவர் வெளியேறியதற்கான காரணத்தை இன்னும் வெளியிடவில்லை. மத்திய அரசு அமைத்த (INSACOG) வல்லுநர் குழுவானது, பல்வேறு வகை கரோனா தொற்று குறித்து ஆராய உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.