ஷஹதோல்: கத்தாரில் நடந்து வரும் பிஃபா உலக கோப்பை கால்பந்து போட்டியை உலகம் முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் ரசித்து வருகின்றனர். மேலும் இந்தியாவில் கிரிக்கெட்டிற்கு பரவலாக ரசிகர்கள் இருந்து வரும் நிலையில், மத்திய பிரதேசத்தில் உள்ள பழங்குடியின கிராமத்தினர் அனைவரும் கால்பந்து ரசிகர்களாக இருந்து வருகின்றனர். அங்கு வசிப்பவர்களில் பெரும்பாலானோர் தேசிய அளவிலான கால்பந்து போட்டியில் விளையாடியவர்களாகவும் உள்ளனர்.
வீட்டுக்கொரு தேசிய கால்பந்தாட்ட வீரர்:இந்தியாவில் கிரிக்கெட் ஆதிக்கம் செலுத்தினாலும், ஷஹதோல் மாவட்டத்தில் உள்ள விச்சார்பூர் கிராமத்தில் உள்ள பெரும்பாலானோர் வீடுகளில் ஒரு தேசிய கால்பந்தாட்ட வீரர் அல்லது வீராங்கனை இருப்பதைக் காணலாம்.
இக்கிராமத்தைச் சேர்ந்த சில வீரர்கள் தேசிய அளவிலான கால்பந்தாட்ட போட்டிகளில் ஓரிரு முறை அல்ல 10 முதல் 12 முறை விளையாடி உள்ளனர். இங்கு பெண்கள், சிறுவர்கள் என 25 முதல் 30 தேசிய கால்பந்து வீரர்கள் உள்ளனர். இதில் பெண்களின் எண்ணிக்கை அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
பயிற்சியாளர் யசோதா சிங்: விசார்பூர் கிராமத்தில் வசிக்கும் யசோதா சிங் அங்குள்ள சிறுவர், சிறுமிகளுக்கு கால்பந்து பயிற்சி அளித்து வருகிறார். இவர் 6 முறை தேசிய அளவிலான போட்டிகளில் விளையாடியுள்ளார்.