பிலாஸ்பூர்: சத்தீஸ்கர் மாநிலம் ராய்ப்பூர் பகுதியை சேர்ந்த சிறுவன் அங்குள்ள பள்ளியில் 5ம் வகுப்பு படித்து வருகிறான். கோடை விடுமுறையையொட்டி, குடும்பத்தினருடன் ரத்னாபூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு வந்துள்ளான். அப்போது தான் சிறுவன் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகியிருக்கிறான்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையின் அடிப்படையில், உறவினர் வீட்டில் தங்கியிருந்த சிறுவன் சம்பவத்தன்று பழங்கள் வாங்குவதற்காக அருகே உள்ள கடைக்கு சென்றான். பின்னர் வீடு திரும்பிக் கொண்டிருந்த போது அதே பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் சிறுவனை அழைத்துள்ளார். தன்னுடன் வந்தால் சாக்லேட் வாங்கித் தருவதாக கூறியிருக்கிறார். அதை நம்பிய சிறுவன் அந்த பெண்ணுடன் சென்றது விசாரணையில் தெரியவந்துள்ளது.
யாருக்கும் தெரியாமல் சிறுவனை வீட்டுக்கு அழைத்து சென்ற பெண், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்துள்ளார். ஒருகட்டத்தில் அச்சம் அடைந்த சிறுவன் அழத் தொடங்கினான். இதைப் பற்றி வெளியே கூறினால் கொலை செய்துவிடுவேன் என அந்த பெண் மிரட்டியது விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. அச்சம் அடைந்த சிறுவன் அங்கிருந்து வீட்டுக்கு தப்பி வந்துள்ளான். எனினும் நடந்த சம்பவத்தை பற்றி வீட்டில் யாரிடமும் அவன் கூறவில்லை.
பின்னர் சில நாட்கள் கழித்து சிறுவனின் குடும்பத்தினர், ராய்ப்பூருக்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் சொந்த ஊருக்கு சென்ற பிறகும் பாதிக்கப்பட்ட சிறுவன் அச்சத்துடனே இருந்துள்ளான். அவனது நடவடிக்கையில் மாற்றத்தை உணர்ந்த தாய், சந்தேகத்துடன் விசாரித்துள்ளார். முதலில் தயங்கிய சிறுவன் அதன்பிறகு நடந்த சம்பவத்தை கூறியுள்ளான். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுவனின் குடும்பத்தினர், அவனை மீண்டும் ரத்னாபூருக்கு அழைத்து வந்து, அந்த பெண்ணை அடையாளம் காட்டுமாறு கூறினர்.
இதையடுத்து தன்னிடம் அத்துமீறிய பெண்ணை பாதிக்கப்பட்ட சிறுவன் அழுது கொண்டே அடையாளம் காட்டினான். பின்னர் இதுகுறித்து ரத்னாபூர் போலீசில் சிறுவனின் பெற்றோர் புகார் அளித்தனர். தங்கள் மகனிடம் தவறாக நடந்து கொண்ட பெண் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். விசாரணையில், சிறுவனிடம் தவறாக நடந்து கொண்டதை அந்த பெண் ஒப்புக் கொண்டார். அதன் அடிப்படையில், போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்த போலீசார் பெண்ணை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை நீதிமன்ற காவலில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டார். கைது செய்யப்பட்ட பெண் கணவரை இழந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.