பெங்களூரு:பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏவும், கர்நாடக அமைச்சருமான ரமேஷ் ஜர்கிஹோலி கடந்த சில நாட்களுக்கு முன்பு பாலியில் புகார் ஒன்றில் சிக்கினார். இது தொடர்பாக, சமூக செயற்பாட்டாளர் ஒருவர் காணொலி ஒன்றையும் வெளியிட்டிருந்தார். இந்த விவகாரம் கர்நாடக மாநிலத்தில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து ரமேஷ் ஜர்கிஹோலி தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
'நான் அவன் இல்லை' - கதறும் ரமேஷ் ஜர்கிஹோலி - கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி
பாலியல் வழக்கில் சிக்கி, பதவியை ராஜினாமா செய்த கர்நாடக அமைச்சர் ரமேஷ் ஜர்கிஹோலி, "நான் குற்றமற்றவன், வீடியோவில் இருப்பது நானல்ல" எனக் கூறியுள்ளார்.
இதுதொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ரமேஷ் ஜர்கிஹோலி, "பாலியல் புகார் தொடர்பாக வெளிவந்த வீடியோவில் இருப்பது நான் அல்ல. நான் குற்றமற்றவன். இது திட்டமிடப்பட்ட சதி. இந்த வீடியோ குறித்த தகவலை நான்கு மாதத்திற்கு முன்னரே நான் அறிவேன். ஆனால், அது என்னை சம்பந்தப்பட்டது அல்ல என்பதால் அமைதியாக இருந்தேன். இப்போது, சிலர் திட்டமிட்டே என்மீது குற்றங்களை சுமத்திவருகின்றனர்.
என்மீதான அனைத்து குற்றங்களுக்கும் உரிய பதிலளித்துள்ளேன். அதனை எதிர்கொண்டும் வருகிறேன். ராஜினாமா செய்வதற்கு முன்பே பொய்யான குற்றச்சாட்டுகளை களைய முயன்றேன். என்னை ராஜினாமா செய்ய யாரும் கட்டாயப்படுத்தவில்லை. என்னால் கட்சியின் பெயருக்கு களங்கம் ஏற்படுவதை நான் விரும்பவில்லை" எனக் கூறினார்.