தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

ஒடிஷாவில் பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 12 பேர் உயிரிழப்பு! - பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து

ஒடிஷா மாநிலத்தில் அரசுப் பேருந்தும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில், 12 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர்.

Several killed
ஒடிஷா

By

Published : Jun 26, 2023, 11:11 AM IST

ஒடிஷா: ஒடிஷா மாநிலத்தில் இன்று(ஜூன் 26) அதிகாலையில் அரசுப் பேருந்து ஒன்று ராயகடாவில் இருந்து தலைநகர் புவனேஸ்வர் நோக்கி சென்று கொண்டிருந்தது. அதேபோல், பெர்ஹாம்பூர் பகுதியில் நடந்த திருமண விழாவில் கலந்து கொண்ட சிலர் தனியார் பேருந்தில் திரும்பிக் கொண்டிருந்தனர்.

இந்த நிலையில், இரு பேருந்துகளும் கஞ்சம் மாவட்டத்தில் திகபஹண்டி அருகே எதிரெதிரே வந்து கொண்டிருந்தபோது, எதிர்பாராதவிதமாக நேருக்கு நேர் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் இரு பேருந்துகளும் மோசமாக சேதமடைந்தன. இரு பேருந்துகளின் முன்புறமும் முற்றிலும் சிதிலமடைந்தன. பேருந்தில் இருந்த பயணிகள் பலர் விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

விபத்து குறித்து தகவலறிந்து சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் மற்றும் மீட்புப் படையினர், காயமடைந்தவர்களை மீட்டு பெர்ஹாம்பூரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர். 6 பேர் படுகாயமடைந்தனர். விபத்தில் உயிரிழந்தவர்கள் பெரும்பாலானோர் தனியார் பேருந்தில் பயணித்தவர்கள் என்று கூறப்படுகிறது.

அதிகாலையில் பேருந்து பயணிகள் உறங்கிக் கொண்டிருந்தபோது, இந்த கோர விபத்து நடந்துள்ளதாகத் தெரிகிறது. விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு ஒடிஷா முதலமைச்சர் நவீன் பட்நாயக் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "கஞ்சம் மாவட்டத்தில் பேருந்துகள் விபத்துக்குள்ளான செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள். இறந்தவர்களின் ஆத்மா சாந்தி அடைய பிரார்த்திக்கிறேன். காயமடைந்தவர்கள் அனைவரும் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேபோல், கஞ்சம் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மூன்று லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கப்படும் என்றும் முதலமைச்சர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார். முன்னதாக கடந்த 2ஆம் தேதி, ஒடிஷா மாநிலம் பாலசோர் அருகே மூன்று ரயில்கள் ஒன்றோடு ஒன்று மோதி கோர விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் குறைந்தபட்சம் 292 பேர் உயிரிழந்தனர். சுமார் 1,000 பேர் படுகாயமடைந்தனர். இந்த விபத்து நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இதையும் படிங்க: Indian Railway: ஒடிசா விபத்து எதிரொலி.. ரயில்வே சிக்னல் அறைகளில் இரட்டை பூட்டு!

ABOUT THE AUTHOR

...view details