தோடா (ஜம்மு-காஷ்மீர்): ஜம்மு-காஷ்மீர் மாநிலம், தோடா மாவட்டத்திலுள்ள கிஷ்த்வாரில் இருந்து ஜம்மு நோக்கிச் சென்ற பேருந்து, படோட் - கிஷ்த்வார் தேசிய நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த போது அசார் என்ற இடத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சுமார் 200 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 36 பேர் உயிரிழந்துள்ளதாகவும், பலர் படுகாயமடைந்துள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜம்முவை சேர்ந்த JK02CN 6555 என்ற பதிவு எண் கொண்ட பேருந்து இன்று (நவ.15) ஜம்மு நோக்கிச் சென்ற போது அசார் பகுதியில் விபத்து ஏற்பட்டதாக உள்ளூர் தகவல் தெரிவிக்கிறது. விபத்து நடந்த இடத்தில் உள்ளூர் மக்கள் மற்றும் அதிகாரிகள் உடனடியாக விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இந்த விபத்தில் 36 பயணிகள் உயிரிழந்துள்ளதாகவும், 19 பேர் படுகாயமடைந்து சிகிச்சைக்காக விமானம் மூலம் ஜம்முவுக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பேருந்து கவிழ்ந்த விபத்துக்கான காரணம் தற்போது வரை சரியான தகவல் கிடைக்கவில்லை எனவும் பேருந்தில் அதிகமான எடை ஏற்றப்பட்டதா அல்லது ஓட்டுநரின் கவனக் குறைவால் விபத்து ஏற்பட்டதா என்பது விசாரணையில் தான் தெரியவரும் எனத் தெரிவிக்கப்படுகிறது. மேலும் முதற்கட்ட விசாரணையில் விபத்துக்குள்ளான பேருந்து ஜம்முவிலுள்ள நர்வால் பகுதியைச் சேர்ந்த தீரஜ் குப்தா என்பவரது என்றும் மூன்றரை ஆண்டுகள் பழைய பேருந்து எனவும், 2021 ஆகஸ்ட் 12ஆம் தேதி பேருந்தில் அதிக எடை எற்றப்பட்டதற்காக அதன் உரிமையாளருக்கு ரூ.600 அபராதம் விதிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.