கர்நாடகா:உடுப்பி மாவட்டம் பைந்தூர் தாலுகாவில் உள்ளகங்கொலி துறைமுகத்தில் இன்று (நவ.13) ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் 11 மீன்பிடி படகுகளும், 2 இருசக்கர வாகனங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. இந்த விபத்தில் படகுகள் தீக்கிரையாகியதால் பல கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டிருப்பதாக மீனவர்கள் வேதனை அடைந்துள்ளனர்.
தீபாவளியை முன்னிட்டு வழிபாடு நடந்து கொண்டிருந்த போது தீ விபத்து ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த தீயணைப்புத்துறையினர் மற்றும் மீட்புப்படையினர் தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். பட்டாசுகள் வெடித்த போது இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் எனச் சந்தேகப்படுவதாக தீயணைப்புத்துறையினர் தெரிவித்துள்ளனர். இருப்பினும், இதற்கான காரணம் இன்னும் தெரியவில்லை. இது குறித்து வழக்குப் பதிவு செய்த போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.