அகர்தலா :திரிபுராவில் ஜெகநாதர் ரத யாத்திரையின் போது, தேர் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி ஏற்பட்ட கொடூர சம்பவத்தில் 22 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
திரிபுரா மாநிலம் உனாகோடி மாவட்டம் குமார்காட் பகுதியில் ஜெகநாதர் ஆலய திருவிழா நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்வான ரத யாத்திரையின் போது, ரதம் உயர் மின்அழுத்த கம்பியில் உரசி விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த விபத்தில் 7 பேர் உயிரிழந்து உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்தில் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதேநேரம் இந்த கோர விபத்தில் 22 பேர் வரை உயிரிழந்து இருக்கலாம் என்றும் உயிரிழப்பின் உண்மைத் தன்மையை வெளியிடாமல் போலீசார் மறைத்து வருவதாகவும் தகவல் கூறப்படுகிறது.
காலை முதலே பலத்த மழை பெய்து வந்த நிலையில், உல்டோ ரத யாத்திரை நடைபெற்றதாகவும் இந்த விழாவில் கலந்து கொள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான மக்கள் குவிந்ததாகவும் போலீசார் தெரிவித்தனர். உல்டோ ரத யாத்திரையின் போது பக்தர்கள் தேர் இழுத்து முன்னோக்கி சென்ற நிலையில், உயர் மின்னழுத்த கம்பி மீது தேர் உரசியதாகவும் அதனால் இந்த கோர விபத்து நடந்ததாகவும் போலீசார் கூறினர்.
இந்த விபத்தில் 7 பேர் வரை உயிரிழந்ததாகவும் படுகாயம் அடைந்த பலர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். விபத்து நடந்த இடத்தில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு படுகாயம் அடைந்தவர்கள் உரிய நேரத்தில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக அதிகாரிகள் கூறினர்.
பல்வேறு மருத்துவமனைகளில் படுகாயம் அடைந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு உள்ளதாகவும் உயிரிழப்பு அதிகரிக்கும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் குறித்து போலீசார் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்து நடந்த இடத்தில் மீட்பு பணிகள் நடைபெற்று வருவதாக கூறப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க :Bhim Army Chief Shot: உபியில் அரசியல் தலைவர் மீது துப்பாக்கிச் சூடு! சினிமாவை மிஞ்சிய கொடூரம்!