டார்சி: ஆந்திரப் பிரதேச மாநிலம், பிரகாசம் மாவட்டத்தின் டார்சி அருகே, திருமண நிகழ்ச்சியில் பங்கேற்கச் சென்றவர்கள் பயணித்த பேருந்து, திங்கட்கிழமை நள்ளிரவு நேரத்தில், சாகர் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த பயங்கரமான சாலை விபத்து சம்பவத்தில், 7 பேர் உயிரிழந்தனர்.
இந்தச் சம்பவத்தில் 7 பேர் உயிரிழந்த நிலையில், 12 பேர் காயமடைந்து உள்ளனர். பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பொதிலி பகுதியில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடாவுக்கு பேருந்து சென்று கொண்டிருந்தபோது, இந்த விபத்து நிகழ்ந்து உள்ளது. விபத்தின்போது பேருந்தில் 35 முதல் 40 பேர் இருந்ததாக தெரிவிக்கப்பட்டு உள்ளது. விபத்து குறித்த தகவல் அறிந்ததும், போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.
திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக காக்கிநாடா செல்வதற்காக, அந்தக் குழுவினர், ஆந்திர மாநிலத்தின் போக்குவரத்துக் கழகமான RTC பேருந்தை வாடகைக்கு எடுத்து உள்ளனர். பேருந்து, பிரகாசம் மாவட்டத்தில் உள்ள பொதிலி பகுதியில் இருந்து கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள காக்கிநாடா நோக்கிச் சென்று கொண்டு இருந்தது. பேருந்து ஓட்டுநர் தூக்க கலக்கத்தில் இருந்ததாகவும், இதன் காரணமாக, பேருந்து ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாகர் கால்வாயில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக, முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் பெயர்கள் வெளியிடப்பட்டு உள்ளன. பிரகாசம் மாவட்டம், பொதிலி பகுதியைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் (65), அப்துல் ஹனி (60), ஷேக் ரமீஸ் (48), முல்லா நூர்ஜஹான் (58), முல்லா ஜானி பேகம் (65), ஷேக் ஷபீனா (35), மற்றும் ஷேக் ஹீனா (6) உள்ளிட்டோர், இந்தச் சம்பவத்தில் உயிரிழந்து உள்ளனர். பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்து உள்ள நிலையில், அவர்கள் சிகிச்சைக்காக, அருகில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.