கோவாவின் பனாஜியில் ஜல் ஜீவன் இயக்கத்தின் கீழ் வீட்டுக்கு வீடு குடிநீர் வழங்கும் திட்ட விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி காட்சி வாயிலாக கலந்துகொண்டு உரையாற்றினார். அப்போது பிரதமர் கூறுகையில், “நாட்டில் 10 கோடி ஊரக வீடுகளுக்கு குழாய்கள் மூலம் தூய்மையான குடிநீர் வழங்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு வீட்டிற்கும் குடிநீர் வழங்கும் அரசின் இயக்கம் பெரிய வெற்றியை பெற்றுள்ளது. ஒவ்வொரு வீடும் குடிநீர் குழாய் மூலம் இணைக்கப்பட்ட முதலாவது மாநிலமாக மாறியிருக்கும் கோவாவுக்கு எனது வாழ்த்துகள்.
7 கோடி கிராமப்புற குடும்பங்களை வெறும் 3 ஆண்டுகளில் குழாய் நீருடன் இணைக்கும் மத்திய அரசின் சாதனை பெரிதும் பாராட்டக்கூடியது. தண்ணீர் தொடர்பான பிரச்சனைகளில் முக்கியமாக பாதிக்கப்படுபவர்கள் பெண்கள் என்பதால், அரசின் முயற்சிகளில் பெண்களே முதன்மையாக கொண்டே வகுக்கப்படுகின்றன. இது பெண்களின் வாழ்க்கையை எளிதாக்குவதுடன், குடிநீர் பிரச்சனையை தவிர்த்து ஏழ்மையில் இருந்து முன்னேறும் எண்ணத்தை கொடுக்கிறது. ஜல் ஜீவன் இயக்கம் என்பது வெறும் அரசாங்கத் திட்டம் அல்ல, இது சமூகத்தால், சமூகத்திற்காக நடத்தப்படும் திட்டம்.
மக்களின் பங்கேற்பு, திட்டம் தொடர்பானவர்கள் பங்கேற்பு, அரசியல் விருப்பம் மற்றும் வளங்களை சிறந்த முறையில் பயன்படுத்துதல் ஆகிய நான்கு தூண்களும் ஜல் ஜீவன் இயக்கத்தின் வெற்றியின் அடிப்படைகளாக உள்ளன. உள்ளூர் மக்கள், கிராம சபைகள் மற்றும் உள்ளாட்சி நிர்வாகம், மற்றும் பிற நிறுவனங்களுக்கு இதன் பிரச்சாரத்தில் முதன்மையான பங்கு வழங்கப்பட்டுள்ளது.