தண்டி யாத்திரைக்காக சபர்மதி ஆசிரமத்தை விட்டு வெளியேறிய அண்ணல் காந்தி, நாடு விடுதலை அடையும்வரை சபர்மதி ஆசிரமத்திற்கு திரும்பக்கூடாது என முடிவெடுத்தார். தண்டி யாத்திரையில் பங்கேற்ற காந்தியை ஆங்கிலேய அரசு கைது செய்தது. இரண்டு ஆண்டுகளுக்குப்பின் சிறையிலிருந்து வெளியேவந்த காந்தி, கிராமத்தை விடுதலைப் போராட்டத்தின் மையப்பகுதியாக மாற்ற முடிவுசெய்தார்.
ஜம்னாலால் பஜாஜின் வேண்டுகோளை ஏற்று, பால்க்வாடிக்கு வந்த அண்ணல் காந்தி சேவாகிராம் மார்க்கில் உள்ள சத்தியாகிரக ஆசிரமத்தில் முதலில் தங்கினார். 1935ஆம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் மகன்வாடியில் தங்கினார். அப்போதுதான், மீரா பென் தங்குவதற்கு அமைதியான இடத்தை காந்தி தேர்வு செய்தார்.
அத்யா ஆதி நிவாஸ்
1936ஆம் ஆண்டு ஏப்ரல் 30ஆம் தேதி காந்திஜி சேவாகிராம் ஆசிரமத்திற்கு முதல்முறையாக வருகிறார். ஏப்ரல் 17ஆம் தேதி, சேவாகிராம் மக்களை சந்திக்கும் காந்தி, பின் ஷிகோவான் கிராம மக்களை சந்தித்தார். ஏப்ரல் 30ஆம் தேதி அங்கு காந்தி வந்தபோது, அவருக்கென தனி குடிசை கூட இல்லை. எனவே, கொய்யா தோட்டத்தில் உள்ள சிறு குடிசையில் காந்தி, ஐந்து நாள்கள் தங்கினார்.
சுதந்திர வரலாற்றை சுமந்து நிற்கும் சேவாகிராம் ஆதி நிவாஸ்
பின்னர் ஜம்னாலால் பஜாஜிடம் ஒரு குடிசை கட்டச் சொல்லும் காந்தி, அந்த குடிசை ஒரு எளிய நபரின் வீடு போல இருக்க வேண்டும் என்கிறார். குடிசைக்கான மொத்த செலவு நூறு ரூபாய்க்குள் முடிய வேண்டும் என்ற காந்தி, இருக்கும் பொருள்கள், உள்ளூர் மக்களைக் கொண்டே இந்த குடிசையை கட்ட வேண்டும் என்கிறார். 1936 மே 5ஆம் தேதி காந்தி காசி யாத்திரை மேற்கொண்டார்.
1936ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி காந்தி திரும்பும் போது ஆதி நிவாஸ் தயாராகவுள்ளது. கிராம மக்களின் துணை கொண்டு மீரா பென் மற்றும் பல்வந்த் சிங் ஒன்றரை மாதத்தில் இந்தக் குடிசைக் கட்டுகின்றனர். ஆனால் இந்த குடிசையைக் கட்ட 499 ரூபாய் செலவாகியுள்ளது. எதிர்பார்த்ததைவிட செலவு அதிகமானது என அறிந்ததும் அண்ணல் காந்தி வருத்தமடைந்தார். பின்னர் ஜம்னாலால் பஜாஜ், காந்தியை சமாதானம் செய்கிறார்.
1937இல் மீரா பென் வசிக்கும் குடிலுக்கே காந்தி செல்கிறார். இந்த குடிசை பாபு குடில் என இன்றளவும் அறியப்படுகிறது. முதலில் மிகச் சிறியதாக இருந்த இந்த குடிசை காந்தியின் வருகைக்கப்பின் பெரிதாக்கப்படுகிறது. குளியலறை, மருத்துவமையம் ஆகியவை கட்டப்படுகின்றன. விடுதலைப் போராட்டம் தொடர்பான பல முக்கிய சந்திப்புகள் இந்த குடிசையில்தான் நடைபெற்றன.
சேவாகிராமத்தில் தனியாக ஒரு குடிசை இல்லாத காலத்தில் காந்தி பல சிரமங்களை சந்தித்தார். இதையறிந்தது, பஜாஜ் காந்திக்காக தனி குடிசை கட்டினார். காந்தி பயன்படுத்திய பல பொருள்கள் இன்றும் இந்த ஆசிரமத்தில் உள்ளன.
காந்தி பயன்படுத்திய விளக்கு, ராமாயணம், பைபிள், குரான் உள்ளிட்ட புத்தகங்கள் சிறிய அலமாரியில் இன்றும் உள்ளன. அத்துடன், கூழாங்கற்கள், பற்குத்திகள், பேனா, பென்சில் குடுவை, மூன்று குரங்கு பொம்மை, ஊசி நூல் ஜெபமாலை, மர கோப்பை, மார்பிள் பேப்பர் வெயிட், பாதம் சுத்தம் செய்யும் கருவி ஆகியவை உள்ளது. காந்தியை எந்த நேரமும் தொடர்பு கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் லின்லித்கோ பிரபு சேவாகிராம் ஆசிரமத்தில் ஹாட்லைன் அலைபேசி வசதியை உருவாக்கினார்.
இந்த ஹாட்லைன் மூலம் பல முக்கிய விவகாரங்கள் பேசப்பட்டுள்ளது. பாரத் சோடோ என்ற முழக்கம் சேவா கிராம் ஆசிரமத்தில் தொடங்கி நாடு முழுவதும் எதிரொலித்தது.
இதுதொடர்பான முக்கிய சந்திப்பு 1942ஆம் ஆண்டு, ஜூலை 9ஆம் தேதி நடைபெற்றது. ஆங்கிலேயர்களை நாட்டை விட்டு எப்போது வெளியேற்றுவது என்ற முடிவு இங்குதான் ஆலோசிக்கப்பட்டது. இந்த இயக்கத்திற்கான பெயர் அனைத்து மக்களுக்கும் புரியும்படி எளிதாக இருக்க வேண்டும் என காந்தி விரும்பினார். வெள்ளையனே வெளியேறு என்ற முழக்கத்தை யூசுப் மெஹராலி ஆலோசனையின்போது சொல்ல, காந்தி அதை ஏற்றுக்கொண்டார். இதுதான் பாரத் சோடோ என்ற முழக்கமாகவும் உருவெடுத்தது.
வெள்ளையனே வெளியேறு இயக்கம் ஆரம்பித்த பிறகும் காந்தி சேவாகிராம் ஆசிரமத்திற்கு வந்துள்ளார். விடுதலை இயக்கத்தின் பல முக்கிய நடவடிக்கைகள் இங்குதான் நடந்துள்ளன. நாட்டின் விடுதலைப் போராட்டத்தின் மையமாக சேவாகிராம் ஆசிரமம் இருந்துள்ளது. ஆங்கிலேயர்களின் அடிமைத்தளையிலிருந்து நாடு விடுதலை பெற்ற முக்கிய வரலாற்றை சுமந்து நிற்கும் சேவா கிராம் ஆசிரமம் ஒட்டுமொத்த நாட்டிற்கும் உந்துசக்தியாக இன்றளவும் உள்ளது.
இதையும் படிங்க:நாட்டு மக்கள் முழுமையான சுதந்திர காற்றை சுவாசிக்க வேண்டும்!