டெல்லி :மத்திய உளவு அமைப்பான ரா (RAW) தலைவராக ஐபிஎஸ் அதிகரி ரவி சின்ஹா நியமிக்கப்பட்டு உள்ளார். நாட்டின் மிக முக்கிய உளவு அமைப்பு ரா எனப்படும் ஆராய்ச்சி மற்றும் பகுப்பாய்வு அமைப்பு. இந்தியா மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் கிளை ஊன்றி முக்கியத் தகவல்களை அராய்ந்து நாட்டின் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தற்போது ரா அமைப்பின் தலைவராக மூத்த ஐபிஎஸ் அதிகாரி சமந்த் குமார் கோயல் உள்ளார். அவரது பதவிக் காலம் வரும் ஜூன் 30ஆம் தேதியுடன் காலாவதி ஆகிறது. இதையடுத்து ரா அமைப்பின் புது தலைவராக, ஐபிஎஸ் அதிகாரி ரவி சின்ஹா நியமிக்கப்பட்டு உள்ளார். 1988 ஆம் ஆண்டு பேட்ஜ் சத்தீஸ்கரை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹா, மத்திய அமைச்சரவை செயலகத்தின் சிறப்பு செயலாளராக பணியாற்றி வருகிறார்.
அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு ரா அமைப்பின் செயலளராக ரவி சின்ஹாவை நியமிக்கும் முடிவுக்கு மத்திய அமைச்சரவையின் நியமனக் குழு அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. ரா அமைப்பின் தலைவராக ரவி சிங்ஹா அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு அல்லது மறு அறிவிப்பு வரும் வரை இருப்பார் என அமைச்சரவை அலுவலக அதிகாரிகள் தகவல் தெரிவித்து உள்ளனர்.
மூத்த ஐபிஎஸ் அதிகாரியான ரவி சின்ஹா, உளவு மற்றும் செயல்பாடு திறன்களில் திறமை வாய்ந்தவர் எனத் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதன் காரணமாக அவரை ரா அமைப்பின் தலைவராக நியமித்து மத்திய அமைச்சரவையின் நியமனக் குழுவின் உத்தரவிட்டு உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.