காந்தி நகர்:குஜராத் மாநிலம், அகமதாபாத்தைச் சேர்ந்தவர், சாமியார் ஆசாராம் பாபு. தன்னைத் தானே கடவுள் என அழைத்து வந்தவர். இந்நிலையில், சூரத்தைச் சேர்ந்த பெண் ஒருவர், சாமியார் மீது பாலியல் புகார் அளித்தார். அகமதாபாத்தில் உள்ள அவரது ஆசிரமத்தில் 2001 முதல் 2006 வரை தங்கி இருந்தபோது சாமியார் ஆசாராம் பாபு, பலமுறை தன்னை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்ததாகப் புகாரில் தெரிவித்து இருந்தார்.
இதுதொடர்பாக சாமியார் ஆசாராம் பாபு, அவரது மனைவி உள்பட 7 பேர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். 2013ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்குத்தொடர்பாக காந்தி நகர் நீதிமன்றம் விசாரித்து வந்தது. இதில் ஒருவர் விசாரணையின் போது உயிரிழந்தார். அதனால் மீதமுள்ள 6 பேர் மீது தொடர்ந்து வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது.
இந்நிலையில், கடந்த 30ஆம் தேதி நடந்த இறுதி கட்ட வழக்கு விசாரணையில் சாமியார் ஆசாராம் பாபு தவிர்த்து மற்ற அனைவரையும் விடுதலை செய்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மேலும் வழக்கில் சாமியார் ஆசாராம் பாபுவை குற்றவாளி என நீதிமன்றம் அறிவித்தது. இந்நிலையில் வழக்கின் இறுதிகட்டத் தீர்ப்பை இன்று காந்தி நகர் நீதிமன்றம் வெளியிட்டது. இதில், சாமியார் ஆசாராம் பாபுவுக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
மேலும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்கக்கோரி நீதிபதிகள் உத்தரவிட்டனர். ஏற்கனவே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக அதே 2013ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை தீர்ப்பு வழங்கப்பட்டு கடந்த 2018ஆம் ஆண்டு சாமியார் ஆசாராம் ஜோத்பூர் சிறை சென்றார். தற்போது தன் ஆசிரமத்தில் அடைக்கலம் புகுந்த மற்றொரு பெண்ணை வற்புறுத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் 81 வயதான ஆசாராம் பாபுக்கு மீண்டும் ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இதையும் படிங்க:பேனா நினைவுச் சின்னம்: கடலில் அமைத்தால் தூக்கி வீசிவிடுவோம் - சீமான் காட்டம்