தேவனகிரி: பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய முயன்ற மர்ம நபரை பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தினர். கர்நாடக சட்டசபைக்கு விரைவில் தேர்தல் நடைபெற உள்ளது. அங்கு ஆட்சியை தக்க வைக்க முதலமைச்சர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜகவும், மீண்டும் ஆட்சியை பிடிக்க காங்கிரஸ் கட்சியும் முயற்சித்து வருகிறது.
இந்நிலையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள பிரதமர் மோடி கர்நாடகா சென்றார். ஜிஎம்ஐடி வளாகம் நோக்கி திறந்த வெளி வாகனத்தில் பிரதமர் மோடி ஊர்வலமாக சென்றார். சாலையின் இரு புறங்களில் இருந்து மலர் தூவி பொது மக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
அப்போது சாலையின் ஓரத்தில் நின்ற இளைஞர், பிரதமர் மோடியின் பாதுகாப்பு வளையத்தை தாண்டி ஊர்வலத்திற்குள் நுழைய முயன்றார். பிரதமர் மோடியின் வாகனத்தை நோக்கி இளைஞர் நெருங்கி வருவதை கண்ட எஸ்பிஜி மற்றும் போலீசார், பாதுகாப்பு படையினர் அவரை தடுக்கும் முயற்சியில் ஈடுபட்டனர்.
இதையடுத்து பிரதமர் வாகனத்தை நோக்கி ஓடி வந்த இளைஞரை போலீசார் மற்றும் பாதுகாப்பு படையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். போலீசாரின் விசாரணையில், தடுத்து நிறுத்தப்பட்ட இளைஞர் கோப்பல் பகுதியைச் சேர்ந்த பசவராஜா என்பது தெரிய வந்தது. என்ன காரணத்திற்காக இளைஞர் பிரதமரின் பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைய முயன்றார் என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து பேசிய கூடுதல் டிஜிபி, அலோக் குமார், "இளைஞரால் பாதுகாப்பு குளறுபடி ஏற்பட்டது. அதேநேரம், பாதுகாப்பு வளையத்திற்குள் நுழைவதற்குள் இளைஞர் தடுத்து நிறுத்தப்பட்டார். என்ன காரணத்திற்காக இளைஞர் பாதுகாப்பு வளையத்தை மீற முயன்றார் என விசாரித்து வருகிறோம்" என்று கூறினார்.