பெங்களூரு: கர்நாடகாவின் சிவமூகா மாவட்டத்தில் உள்ள அமிர் அகமது ரவுண்டானாவில் நேற்று (ஆக. 15) சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒரு தரப்பினர் அங்கு சார்வாக்கரின் பேனரை வைக்க முற்பட்டுள்ளனர். அதற்கு எதிர்ப்பு தெரிவித்த மற்றொரு தரப்பினர் திப்பு சுல்தானின் பேனரை வைக்க முன்வந்துள்ளனர். இதனால், இரு தரப்புக்கும் இடையே ஏற்பட்ட மோதல், வன்முறையாக மாறியது.
இதையடுத்து, வன்முறையை கட்டுப்படுத்த போலீசார் தடியடி மேற்கொண்டனர். நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பின், இருதரப்பும் பேனர் வைக்க முற்பட்ட இடத்தில், அதிகாரிகள் தேசிய கொடியை நிறுவியுள்ளனர். மேலும், அப்பகுதியில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பாக இதுவரை 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனைத்தொடர்ந்து, வன்முறை நடந்த பகுதிக்கு அருகே உள்ள காந்தி பஜாரில், நேற்றிரவு தனது கடையை அடைத்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பிரேம் சிங் (20) என்பவரை அடையாளம் தெரியாத நபர்கள் கத்தியால் குத்தியுள்ளனர். இதில், காயமடைந்த அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவர் மீது தாக்குதல் நடத்தியதாக 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.