சத்தீஸ்கர்: 90 சட்டமன்ற தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில் முதல் கட்டமாக, கடந்த நவம்பர் 7 அன்று 20 தொகுதிகளுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த நிலையில், இன்று (நவ.17) மீதம் உள்ள 70 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
இதனையடுத்து, இன்று காலை 7 மணிக்கு சத்தீஸ்கர் மாநிலத்தில் இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், காலை 9 மணி நிலவரப்படி 5.71 சதவீத வாக்குகள் பதிவாகியது. இதனைத் தொடர்ந்து, காலை 11 மணி நிலவரப்படி 19.65 சதவீத வாக்குகள் பதிவாகியது. மேலும், மாலை 5 மணி நிலவரப்படி 67.34 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளது.
இரண்டாம் கட்ட வாக்குப்பதிவிற்காக 18 ஆயிரத்து 800க்கும் அதிகமான வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. 70 சட்டமன்ற தொகுதிகளில் 958 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். இதில், அதிகபட்சமாக ராய்ப்பூர் சிட்டியின் மேற்கு சட்டமன்றத் தொகுதியில் 26 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக டவுண்டிலோஹரா தொகுதியில் 4 வேட்பாளர்களும் போட்டியிடுகின்றனர். இவற்றில் பிந்தராநவகர் தொகுதிக்கு உட்பட்ட 9 தொகுதிகளில் மட்டும் காலை 8 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கி மாலை 5 மணி வரை நடைபெறும்.
இந்த இரண்டாம் கட்ட வாக்குப்பதிவில் மொத்தமாக, சத்தீஸ்கர் மாநிலத்தின் 22 மாவட்டத்தில் 1 கோடியே 63 லட்சத்து 14 ஆயிரத்து 479 வாக்காளர்கள் வாக்களிக்க உள்ளனர். இரண்டாம் கட்டத் தேர்தலில் 958 வேட்பாளர்கள் போட்டியிடும் நிலையில், இவர்களில் 827 ஆண் வேட்பாளர்களும், 130 பெண் வேட்பாளர்களும் மற்றும் ஒரு மூன்றாம் பாலினத்தவர் ஆகியோரும் போட்டியிடுகின்றனர். இவ்வாறு இரண்டு கட்ட வாக்குப்பதிவில் பதிவான வாக்குகள் வருகிற டிசம்பர் 3 அன்று எண்ணப்பட உள்ளது.
இதையும் படிங்க:கேரளா செவிலியருக்கு ஏமன் நீதிமன்றம் மரண தண்டனை.. மேல் முறையீட்டு மனு நிராகரிப்பு!