டெல்லி:இரண்டாவது நாளாக இன்று (ஜூலை 21) நாடாளுமன்றம் 11 மணிக்கு தொடங்கியது. மணிப்பூர் சம்பவம் குறித்து விவாதிக்கக்கோரி மக்களவையில் இன்றும் எதிர்கட்சிகள் நோட்டீஸ் கொடுத்துள்ளனர். அந்த நோட்டீஸில், “அவை அலுவல்கள் இருந்தாலும், மணிப்பூர் சம்பவம் தொடர்பாக குறுகிய விவாதம் நடத்தலாம் என்றும் எதிர்கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
மேலும், மணிப்பூர் சம்பவம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி விளக்கம் அளிக்க வேண்டும்” என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி இருந்தன. இந்த நிலையில், இன்றைய கூட்டம் தொடங்கியதும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க எதிர்கட்சி தரப்பினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால் மக்களவை மதியம் 12 மணி வரை ஒத்தி வைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து தொடங்கிய மக்களவையில், மீண்டும் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக பிரதமர் உடனடியாக விளக்கம் அளிக்க வேண்டும் என எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர். இதனால், கூட்டத்தொடரை நடத்த முடியாத சூழல் உருவானது. எனவே, வருகிற திங்கள்கிழமை (ஜூலை 24) காலை 11 மணி வரை மக்களவையை ஒத்தி வைத்து மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்துள்ளார். அதே போன்று, மாநிலங்களவை பிற்பகல் 2.30 மணி வரை ஏற்கனவே ஒத்தி வைக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, நேற்று (ஜூலை 20) நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் தொடங்கியது. அப்போது, மணிப்பூர் கலவரத்தில் இரண்டு பழங்குடியின பெண்கள் ஊர்வலமாக அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் குறித்து விவாதிக்க வேண்டும் என நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு எதிர்கட்சிகள் சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டது.
அதன் பிறகு மக்களவை கூடியதும் மறைந்த எம்பிக்கள் மற்றும் முன்னாள் எம்பிக்களுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவை பிற்பகல் 2 மணிக்கு ஒத்தி வைக்கப்பட்டது. பிற்பகலில் அவை கூடியதும், மணிப்பூர் விவகாரம் தொடர்பாக எதிர்கட்சிகள் கொடுத்த நோட்டீஸ்கள் தள்ளுபடி செய்யப்பட்டன.