டெல்லி : பெங்களூருவில் நடைபெற உள்ள அனைத்து எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில், கட்சிகளிடையேயான கருத்து பகிர்வுகள், தொகுதி பங்கீடு, தேசிய அளவிலான போராட்டங்கள், எதிர்க்கட்சிகள் ஒற்றுமை உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடத்த உள்ளதாக காங்கிரஸ் செயல்பாட்டு குழு தலைவர் சையத் நசீர் ஹூசைன் தெரிவித்து உள்ளார்.
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் ஜூலை 17 மற்றும் 18 ஆகிய தேதிகளில் எதிர்க்கட்சிகள் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் நடைபெற திட்டமிடப்பட்டு உள்ளது. 2024ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், ஆளும் பாஜகவுக்கு எதிராக அனைத்து எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் பணி நடைபெற்று வருகிறது.
இதன் ஒரு பகுதியாக கடந்த ஜூன் மாதம் 23ஆம் தேதி பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் தலைமையில் அனைத்து எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டம் பாட்னாவில் நடைபெற்றது. இதில் திமுக உள்பட 15 எதிர்க்கட்சிகள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டு உள்ளன. இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் இரண்டாவது கட்ட ஆலோசனைக் கூட்டம் கர்நாடக தலைநகர் பெங்களூருவில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் ஜூலை 17, 18 ஆகிய தேதிகளில் பெங்களூருவில் நடைபெறும் என அக்கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டது. இரண்டாவது கட்ட எதிர்க்கட்சிகள் ஆலோசனைக் கூட்டத்தில் திமுக, மதிமுக உள்ளிட்ட 20 கட்சிகள் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.