பெங்களூரு: கோவிட் பெருந்தொற்றுக்கு மத்தியில் மாநிலத்தில் பள்ளிகள், கல்லூரிகளை திறப்பது குறித்து ஆகஸ்ட் 6ஆம் தேதி அம்மாநில அரசு முடிவெடுத்தது. வருகிற 23ஆம் தேதி திங்கள்கிழமை மாநிலத்தில் பள்ளிகள் திறக்கப்படுகின்றன.
இது தொடர்பாக மாநில அரசின் முக்கிய 5 வழிகாட்டுதல்கள் குறித்து பார்க்கலாம்.
- கரோனா பாதிப்பு 2 விழுக்காடுக்கும் குறைந்த மாவட்டத்தில் பள்ளிகள் திறக்கப்படும். ஒருவேளை கரோனா பாதிப்புகள் ஏற்பட்டால் பள்ளிகள் உடனடியாக மூடப்படும். இது பாதிப்பின் அளவை பொறுத்தது.
- மாணவ- மாணவியர்கள் பள்ளிகளில் கட்டாயம் முகக்கவசம் அணிந்திருக்க வேண்டும். தகுந்த இடைவெளி கடைப்பிடிப்பு மற்றும் கிருமிநாசினி கொண்டு கைகளை சுத்தம் செய்வது அவசியம்.
- மாவட்டத்தின் கரோனா பாதிப்பு நிலையை கவனத்தில் கொண்டு கோவிட் நிர்வாக விதிமுறைகள் மாற்றியமைக்கப்படும். இது அப்போதுள்ள சூழ்நிலையை பொறுத்தது.
- மாநிலத்தில் கரோனா நிலவரம் தொடர்பாக சுகாதார நிபுணர்களை சந்தித்து தடுப்பூசி பணிகளை விரைப்படுத்த முதலமைச்சர் பசவராஜ் பொம்மை வலியுறுத்தியுள்ளார். இதில் ஆசிரியர்கள்- ஆசிரியைகள் கவனம் செலுத்த வேண்டும். அவர்கள் முதல்கட்டமாக இரண்டு தடுப்பூசிகளும் செலுத்தியிருக்க வேண்டும்.
- பள்ளியில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும், கட்டாயமாக தடுப்பூசி போட்டிருக்க வேண்டும் மற்றும் கோவிட் -19 வழிகாட்டுதல்களை முழுமையாக பின்பற்ற வேண்டும். தடுப்பூசி போடாத பணியாளர்கள் பள்ளி வளாகத்திற்குள் அனுமதிக்கப்பட மாட்டார்கள். பெற்றோரும் தடுப்பூசி போட்டிருக்க வேண்டும்.
இவைகள் மாநில அரசு விடுத்துள்ள வழிகாட்டுதல் நடைமுறையில் உள்ள 5 முக்கிய அம்சங்கள் ஆகும்.
பசவராஜ் பொம்மை
முன்னதாக கர்நாடகாவின் புதிய முதலமைச்சராக பசவராஜ் பொம்மை பொறுப்பேற்ற நிலையில் மாநிலத்தில் பள்ளிகளை திறப்பது குறித்து அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். அதன்படி, “மாநிலத்தில் 9, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் வருகிற 23ஆம் தேதி முதல் திறக்கப்படுகின்றன.
இது குறித்து பேசிய பசவராஜ் பொம்மை, “மாநிலத்தில் இரவு ஊரடங்கு ஒரு மணி நேரத்துக்கு முன்னதாகவே அமலுக்கு வருகிறது. கேரளா மற்றும் மகாராஷ்டிரா எல்லையில் உள்ள மாவட்டங்கள் மற்றும் பகுதிகளுக்கு இரவு 10 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு ஊரடங்கு அமல்படுத்தப்படும்” என்றார்.