தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / bharat

மணிப்பூரில் நாளை பள்ளிகள் திறப்பு - இயல்பு நிலை திரும்புகிறதா? - மணிப்பூரில் இயல்பு நிலை

மணிப்பூரில் வன்முறை காரணமாக கடந்த மே மாதம் முதல் வாரத்தில் மூடப்பட்ட பள்ளிகள் நாளை முதல் திறக்கப்படும் என்றும், உரிய பாதுகாப்புடன் விவசாயப் பணிகள் தொடங்கும் என்றும் முதலமைச்சர் பிரேன் சிங் தெரிவித்துள்ளார்.

Manipur
மணிப்பூர்

By

Published : Jul 4, 2023, 11:18 AM IST

மணிப்பூர்:மணிப்பூரில் வாழும் பெரும்பான்மை சமூகமான மெய்தீஸ் இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே 3ஆம் தேதி, மணிப்பூர் அனைத்து பழங்குடியின மாணவர்கள் அமைப்பு சார்பில் பேரணி நடத்தப்பட்டது. இந்த பேரணிக்கு எதிராக மெய்தீஸ் உள்ளிட்ட பெரும்பான்மை சமூகத்தினரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் பல இடங்களில் கலவரம் வெடித்தது. வீடுகள், வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

அன்று முதல் சுமார் இரண்டு மாதங்களாக மணிப்பூரில் வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இதில் 120க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்துள்ளனர். கலவரம் நடந்த பகுதிகளில் இருந்து பொதுமக்கள் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும், சுமார் 50 ஆயிரம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மாநிலம் முழுவதும் ஆயிரக்கணக்கான போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மணிப்பூரில் வன்முறையை கட்டுப்படுத்த முடியாமல் மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. மணிப்பூர் விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. எதிர்கட்சிகள் மத்திய அரசுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றன. இந்த கலவரம் காரணமாக கடந்த மே மாதம் முதல் வாரத்திலிருந்து, 1 முதல் 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் மூடப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ராணுவம், துணை ராணுவம் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் முதலமைச்சர் பிரேன் சிங் நேற்று (ஜூலை 4) ஆலோசனை மேற்கொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அவர், "மணிப்பூரில் வன்முறை நடந்த பகுதிகளில் சட்ட விரோதமாக அமைக்கப்பட்ட பதுங்கு குழிகள் அகற்றப்படும்.

விவசாயப் பணிகள் தொடங்கும். விவசாயிகளுக்கு பாதுகாப்பு வழங்க கூடுதலாக படைகள் குவிக்கப்பட்டுள்ளன. ஜூலை 5 முதல் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையில் பள்ளிகள் தொடங்கும். வீடுகளை இழந்த மக்களுக்கு புதிய வீடுகள் கட்டும் பணி போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது.

ஒரு மாதத்திற்குள் அவர்கள் நிவாரண முகாம்களில் இருந்து வீடுகளுக்கு மாற்றப்படுவர். வன்முறையைத் தூண்டும் வகையில் யாரும் பரப்புரை செய்ய வேண்டாம். மாநிலத்தில் அமைதி நிலவுவதற்காக அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்" என தெரிவித்தார்.

இதையும் படிங்க: மணிப்பூர் கலவரம் - 'புதுப்பிக்கப்பட்ட' நிலை அறிக்கையை சமர்ப்பிக்குமாறு மணிப்பூர் அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

ABOUT THE AUTHOR

...view details