மேற்கு வங்கம்: மேற்குவங்க மாநிலம் பாங்குரா மாவட்டத்தில் உள்ள சந்த்பிலா என்ற பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இதில், ஐந்தாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 32 மாணவர்கள் படிக்கின்றனர். இப்பள்ளியில் அரசு ஆசிரியர்கள் யாரும் இல்லை. ஒப்பந்த முறையில் அமியா சக்கரவர்த்தி என்ற ஒரே ஒரு தற்காலிக ஆசிரியர் மட்டுமே பணியாற்றி வந்தார். இந்த ஒரு ஆசிரியர்தான் அனைத்து வகுப்புகளுக்கும் பாடம் நடத்தி வந்ததாக தெரிகிறது.
இந்த சூழலில், கடந்த எட்டு மாதங்களுக்கு முன்பு எதிர்பாராதவிதமாக அந்த ஆசிரியர் விபத்தில் சிக்கிக் கொண்டார். இதில், உடல் நலம் பாதிக்கப்பட்டு படுத்த படுக்கையாகிவிட்டார். இதனால், ஆசிரியர் இல்லாமல் பள்ளி மாணவர்கள் தவித்தனர். மாணவர்களின் கல்வி பாதிக்கப்பட்டதால், மாணவர்களின் பெற்றோர் இது தொடர்பாக மாவட்ட கல்வித்துறையை தொடர்பு கொண்டனர். உடனடியாக அரசுப் பள்ளிக்கு ஆசிரியரை நியமிக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். ஆனால், கல்வித்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கடந்த எட்டு மாதங்களாக தற்காலிக ஆசிரியர் படுத்தப் படுக்கையாக இருப்பதால், எட்டு மாதங்களாக பள்ளியும் மூடப்பட்டுள்ளது. இதனால், தேர்வும் நடத்தப்படவில்லை. மாணவர்கள் டியூஷன் சென்றும், வீட்டில் இருந்தபடியும் படித்து வருகின்றனர். இதனால் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகியுள்ளது. புகார் அளித்தும் மாவட்ட நிர்வாகமும், மாநில அரசும் மெத்தனமாக இருப்பது, பெற்றோர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.