அவுரங்காபாத் (மகாராஷ்டிரா):பள்ளிக்குச் செல்லும் குழந்தைகள் தோளில் புத்தகப்பையையும், கையில் சாப்பாட்டுக் கூடையையும் கொண்டு செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால், மகாராஷ்டிரா மாநிலத்தின் வரலாற்று சிறப்புமிக்க அவுரங்காபாத் மாவட்டத்தில் இருக்கும் பிவ்தானோரா கிராமத்தில் உள்ள குழந்தைகள் பள்ளிக்குச் செல்லும்போது கையில் ஒரு கம்பு அல்லது குச்சியை எடுத்துச் செல்கின்றனர்.
இந்த கம்பு எதற்காக தெரியுமா? வழியில் தங்களுடன் பயணம் மேற்கொள்ள விரும்பும் பாம்புகளை விரட்டுவதற்காகத்தான். அதிலும், தரையில் அல்ல; தண்ணீரில். ஏனென்றால், இவர்கள் தங்களது கிராமத்தில் இருந்து மற்றொரு கிராமத்தில் உள்ள பள்ளிக்குச் செல்வதற்கு ஜயக்வாடி என்ற அணையின் பின்புறம் இருக்கும் நீர்நிலை வழியாகத்தான் செல்ல வேண்டும். அதிலும், அவை முழங்கால் அளவில் ஓடும் தண்ணீர் இல்லை.
சிறிய படகு அல்லது பரிசலில் பயணம் மேற்கொள்ளும் அளவுக்கு உள்ள தண்ணீர், அந்த நீர்நிலையில் இருக்கிறது. ஆனால், பிவ்தானோரா கிராமத்தில் உள்ள சுமார் 15 பள்ளி மாணவர்கள் தெர்மாகோல் மீது அமர்ந்து பயணம் மேற்கொண்டு பள்ளிக்குச் செல்கின்றனர். இந்த ஆபத்தான பயணத்தை, தொடர்ந்து மேற்கொண்டு வருவதை அறிந்த அவுராங்காபாத் முன்னாள் மாவட்ட ஆட்சியர் சுனில் சவான், இது தொடர்பாக கங்காபூர் தாசில்தார் மற்றும் குழு வளர்ச்சி அலுவலர் அறிக்கை சமர்பிக்க வேண்டும் என உத்தரவிட்டு இருந்தார்.